1000 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை சாதித்த செங்கொடியின் பெருமிதம்
மாவட்ட ஆட்சியருடன் பேச்சு வார்த்தை முடிந்து நாங்கள் திரும்பி வந்தபோது போராட்டக்களம் கொண்டாட்டக் களமாக மாறி இருந்ததை பார்த்தோம். இசைக்கருவிகளில் இருந்து இசை வழிந்து ஓட ஆதிவாசி மக்கள் குழு வாக தங்களின் பாரம்பரியமான குழு நடனத்தை ஆடிக் கொண்டிருந்தனர். பட்டாசு ஒரு பக்கம் வெடித்துக் கொண்டி ருந்தது. இனிப்புகளை வாங்கி வைத்திருந் தனர். வெற்றிக் களிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அன்று நேரில் பார்த்து வியந்தோம். எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, எத்தனையோ வெற்றிகளை பெற்றிருக் கிறோம். பலனடைந்த மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்ற னர். ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க கைகூப்பி வணங்கி வணக்கம் செலுத்தி இருக்கின்றனர். ஆனால், திருமூர்த்திமலை மக்கள் 1000 ஆண்டு காலமாக சாதிக்க முடி யாததை இந்த தலைமுறை நம் காலத்தில் சாதித்து விட்டோம் என்ற பெருமிதம், வெற்றிக்களிப்பு. அதை கொண்டாட்டமாக வெளிப்படுத்தும் வேட்கை அவர்களிட மிருந்து வெளிப்பட்டதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
வெளியிலேயே தெரியாது இவர்களின் இருப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா திருமூர்த்தி மலையிலிருந்து மேலே சென்றால் மலைப் புலையன், ஏரவல்லான், முதுவன், மலைமலசர் ஆகிய பழங்குடி பிரிவை சார்ந்த மக்கள் சுமார் 7000 பேர் வாழ்ந்து வருகின்றனர். ஆனை மலை புலிகள் சரணாலயம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வன சரகத்திற்கு உட்பட்டது. ஆனைமலைத் தொடரில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காட்டில் விளையும் சிறு வனப் பொருட்களை சேகரித்து விற்று வாழ்வதுதான் இவர்களின் பிரதானமான வாழ்வாதாரம். விவசாயமும் செய்கின்றனர். பழங்குடி மக்களின் 15 சிறு கிராமங்கள் (செட்டில்மெண்ட்) உள்ளன. திருமூர்த்திமலை கோவில் வரை சாலை மற்றும் பேருந்து சேவை உள்ளது. அங்கிருந்து அனைத்து மலைக் கிராமங்களுக்கும் நடந்துதான் செல்ல வேண்டும். 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷார் வனத்திற்குள் நடைபாதை எல்லைகளை வரையறுத்து கல்நட்டு கொடுத்துள்ளனர். 21 ஆம் நூற்றாண்டிலும் சாலையின்றி, போக்குவரத்து வசதி ஏதும் இன்றி, மின்சாரம் இல்லாமல் மருத்துவ மனைகளோ, மருந்துக் கடைகளோ இன்றி ஒரு பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர் என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனைமலைத் தொடரில் ஆதி வாசி மக்கள் வசிக்கும் பல கிராமங்களில் நிலைமை இதுதான். இத்தகைய நிலை யில், அரசு சாலை அமைக்க அதிகாரப்பூர்வ மான உத்தரவை தங்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பெற்றுவிட்டார்கள் என்றால் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்!
அதானி நிறுவனம் காட்டுப்பள்ளியில் துறைமுகம் அமைக்க தரைப்பகுதியில் 2000 ஏக்கர், கடலுக்குள் 2000 ஏக்கர் வழங்கப் படும் தமிழ்நாட்டில், ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிக்கு அத்தியாவசிய தேவை யான சாலை அமைக்க 2.5 ஏக்கர் நிலம் வழங்க வனத்துறை மறுத்துவிட்டது. ஏனென்றால், வனம் அழிந்து விடுமாம். மின்சார இணைப்பு வழங்கினால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமாம். ஆதிவாசி மக்களுக்கும் வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்கும் காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டம் 2006 டிசம்பர் 15 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இச்சட்டத்திற்கான விதிகள் 2008 ஜனவரி 1 முதல் நடைமுறையில் இருக் கிறது. சட்டம் அமல்படுத்த துவங்கி 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சட்டத்தின் பலன் மக்களை முழுமையாக சென்றடையவில்லை.
எவ்வளவு நல்ல சட்டமாக இருந்தாலும் அமல்படுத்தும் அதி காரிகள் அதில் ஆர்வமும், அக்கறையும் செலுத்தாமல் போனால் அது ஏட்டளவில் மட்டுமே இருக்கும் என்பதற்கு வலுவான உதாரணம் இந்த வன உரிமைச் சட்டம். உடு மலைப் பேட்டையில் ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்ற மலைவாழ் மக்களின் போராட்டமும், இந்த சட்டம் உறுதி செய்துள்ள உரிமையைக் கேட்டுத்தான். வன உரிமைச் சட்டத்தில் மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர ஒரு ஹெக்டேர் வரை வன நிலத்தை ஒதுக்க லாம்; அந்த நிலப்பரப்பிற்குள் மரங்கள் இருந்தால் 75க்கு மேல் வெட்டப்படாத வகை யில் இருக்க வேண்டும்; இது குறித்து கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; கிராம சபையின் தீர்மானத்திற்கு கோட்ட அளவிலான வனக் குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான, மாவட்ட அளவிலான வன உரிமைக் குழு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது தான் சட்டம். பொதுவாக சட்டம் இப்படி இருந்தாலும், வனச்சரணா லயங்கள், தேசிய பூங்காக்களுக்கு இது பொருந்தாது. எனவே, இத்தகைய உரிமைகளுக்கான அனுமதி கோரி இணையம் வழியாக பர்வேஷ்போர்ட்டல்-க்கு விண்ணப்பிக்க வேண்டும்; மாவட்ட வன அலுவலர் அனுமதி தர முடியாது என்பது தான் வனத்துறை அதிகாரிகளின் கருத்தாக முன்வைக்கப்பட்டது. சட்டத்திற்கும், வனத்துறை அதிகாரிகளின் விளக்கங் களுக்குமான இடைவெளிதான், போராட்டம் இரவு - பகலாக மூன்று நாட்கள் தொடர்ந்ததற்கான அடிப்படை யான காரணம்.
சட்டம் என்ன சொல்கிறது?
வன உரிமைச் சட்டத்தின் “பிரிவு - 1 (டி) “வன நிலம்” என்பது எந்தவொரு வனப்பகுதிக்குள் உள்ள வன நிலத்தை யும், வகைப்படுத்தப்படாத காடுகள், பிரித்து வைக்கப்படாத காடுகளையும், இப்போது இருக்கும் அல்லது காடு என்று கருதப்படும் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட காடுகள் சரணா லயங்கள், தேசிய பூங்காக்கள் ஆகி யவையும் அடங்கிய பகுதிகள்” என்று குறிப்பிடுகிறது. காட்டுப்பகுதிக்கான உரிமைகள் என்பது “பிரிவு 3(2)ல் பள்ளிகள், சாலை அமைத்தல் உள்ளிட்ட 12 அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மக்க ளுக்கு ஏற்படுத்திட காட்டு நிலத்தினை ஒதுக்கி ஒரு ஹெக்டேருக்கு 75க்கு மிகைப்படாமல் மரங்களை வெட்டலாம். மேற்கண்ட வசதிகளுக்காக ஒதுக்கப்படும் நிலம் ஒரு ஹெக்டேருக்கு குறைவாகவே இருக்க வேண்டும். இத்தகைய வளர்ச்சித் திட்டங்களுக்கு கிராம சபையின் பரிந்து ரையின் பெயரிலேயே ஒப்புதல் வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பகுதி மூன்றில் பிரிவு 4(1) கூறுவது, “தற்போது நடைமுறையில் இருக்கும் வேறெந்த சட்டத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ள போதிலும் கூட தற்போது இயற்றப்படும். இந்தச் சட்டத்தின் விதிமுறை களுக்கு இணங்கிய வகையில், காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு காடு களுக்கான உரிமையை மத்திய அரசானது இதன் மூலம் அங்கீகரித்து வழங்குகிறது. இதைவிட மேலும் ஒரு படி மேலே போய் பகுதி ஏஐ 10(3)ல் “இந்த சட்டத்தின் கீழ் நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட அல்லது செய்வதென்று தீர்மானிக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கைக்காகவும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக எவ்வித வழக்கும் அல்லது இதர சட்ட ரீதியான நடவடிக்கை களோ மேற்கொள்ளலாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலும் சில அதிகாரிகள் பிடிவாதப் போக்கு டன் இருப்பார்கள் என்பதை உணர்ந்து விதி களில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால்” பழங்குடி சமூகத்தினரின் கோரிக்கைகளை, சட்டத்தின் நோக்கங்களை மனதில் கொண்டு சரிபார்த்தல் அவசியம்” என்ப தாகும்.
இச்சட்டத்திலுள்ள இந்த அம்சங்கள் அனைத்தையும் 4 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போதும் எடுத்துரைத்தோம். ஆனால், சட்டம் இவ்வளவு தெளிவாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள போதும், மாவட்ட வன அலுவலரும், சரணா லயத்தின் துணை பாதுகாவலரும் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர். இணைய வழி யாக விண்ணப்பியுங்கள்; விரைவாக அனு மதி பெற்றுத்தருகிறோம் என்றார்கள். சரி எவ்வளவு நாட்களில் உங்களால் அனுமதி பெற்றுத்தர முடியும் என்று கேட்டோம். அதற்கு எந்த உத்தரவாதமும் தரமுடியாது என்றார்கள். ஆகவே, தான் போராட்டத்தை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
9 ஆண்டில் ஒரு மனுவுக்கு கூட பதில் இல்லை
இந்த காலத்தில் எல்லாமே டிஜிட்டில் மயம் ஆகிக் கொண்டிருக்கிறது; இணைய வழியாக அனுமதி பெற வேண்டியது தானே என்று கூட பலரும் கருதலாம். இந்த “பர்வேஷ்போர்ட்டல்” என்ற இணைய தளத்தை 2014-15ல் உருவாக்கியிருக் கிறார்கள். நாடு முழுவதிலிருந்து 7000க்கு மேற்பட்ட மனுக்கள் விண்ணப்பிக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து 217 மனுக்கள் அனுமதி கோரி அனுப்பப் பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகாலத்தில் ஒரு மனுக்களுக்கு கூட அனுமதி அளித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. டாப்சிலிப் எருமப்பாறையில் வசிக்கும் 24 ஆதிவாசி குடும்பங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு கோரி அதிகாரிகள் பேச்சை கேட்டு இதன் மூலம் விண்ணப்பித்திருக் கிறார்கள். 3 1/2 ஆண்டுகள் ஆகிவிட்டது. விண்ணப்பித்தவர்களில் 5 பேர் இறந்தும் போய் விட்டார்கள். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுவிட்டது. அரசின் சார்பில் மின்வாரியத்திற்கு இம்மக்க ளுக்கு மின் இணைப்பு வழங்குவதற் காக 6 லட்ச ரூபாய் பணமும் செலுத்தப்பட்டு விட்டது. ஆனால், வனத்துறை அனுமதி மட்டும் கிடைக்காததால் இருட்டிலேயே அம்மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர். மற்றொன்று, வன உரிமைச் சட்டப்படி அப்படி விண்ணப்பிக்க வேண்டிய அவசிய மும் இல்லை. அதற்கான எந்தவொரு அர சாணையும் இல்லை. வன உரிமைச் சட்டத்தை பொறுத்தவரை கிராமசபை தான் தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் படைத்தது. கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான வன உரிமைக் குழுக்கள் தான் இறுதிப்படுத்த வேண்டியவை. ஆனால், சாலைக்கு அனுமதி தரும் பிரச்சனையில் வனத்துறை அதிகாரிகள் பிடிவாதப் போக்கை கடைபிடித்தனர். அதன் நோக்கம், காலம் கடத்துவது, சட்டத்தின் பலன் மக்களுக்கு போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்பது தான்.
போராட்டத்தின் விளைவு
திருமூர்த்திமலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை 5.37 கி.மீ தூரத்திற்கு 1.47 ஹெக்டேர் நிலம். இதில் 2005க்கு முன்பு 1.96 கி.மீ (0.54 ஹெக்டேர்) பாதை பயன்பாட்டில் உள்ளது. அதாவது 1.8.1949ல் கல் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.41 கி.மீ தூரத்திற்கு 0.93 ஹெக்டேர் நிலத்தில் சாலை அமைக்க சமுதாய உரிமை வழங்க தீர்மானிக்கப்படுகிறது என்பது தான் தற்போதைய எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக ஜூலை 14 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு. ஈஷா, காருண்யா மற்றும் பல்வேறு நபர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் வன நிலங்களை சட்டத்தின் சந்து பொந்து களிலும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் வளைத்து அனுபவித்துக் கொண்டுள்ளனர். ஆனால், காட்டின் பாரம் பரிய சொந்தக்காரர்களான ஆதிவாசி மக்கள் தங்களின் சமுதாய மக்களுக்கு சாலை அமைக்க வெறும் 2 ஏக்கர் நிலம் பெற எத்தனை பெரிய போராட்டம் நடத்த வேண்டியுள்ளது? இப்போது புரிந்து கொள்ள முடியும் அம்மக்கள் ஏன் அதை அவ்வளவு பெரிதாக கொண்டாடினார்கள் என்று!
நாட்டிற்கே வழிகாட்டும் வெற்றி
இந்தப் போராட்டத்தின் வெற்றி திருமூர்த்திமலையில் வசிக்கும் ஆதிவாசி களுக்கு மட்டுமானதல்ல! வனச்சரணா லயங்களுக்குள் சமுதாய உரிமைகளைப் பெற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்ற வனத் துறையின் முடிவுக்கு சமாதி கட்டப் பட்டுள்ளது. எனவே, இது நாடு முழுவது முள்ள ஆதிவாசி மக்கள் இனி வன உரிமைச் சட்டப்படி மாவட்ட அளவிலான வன உரிமை கமிட்டியிலேயே உரிமைகளுக் கான அனுமதியைப் பெற முடியும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில், தங்களின் உறுதிமிக்க போராட்டத்தின் மூலம் அம்மக்கள் பெற்றுள்ளனர்.
ஆட்சியரின் உறுதி
இந்த நல்ல முடிவை எட்டுவதில் மாவட்ட ஆட்சியரின் உறுதியான நிலைப்பாடு முக்கிய பங்கை வகித்தது. சாலை அமைக்க இனி சட்டப்படி தடை இல்லை என்றாலும், அதற்கான நிதி, எப்போது வேலை துவங்கப்படும் என்ற கேள்வி தொக்கி நின்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஏதாவதொரு நிதியிலிருந்து பணத்தை நாங்களே தருகிறோம்; விரை வில் டெண்டர் விடுவதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள் என்று பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். சாலை இல்லாமல், வாகனம் செல்ல வழியின்றி உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாமல் எத்தனையோ கர்ப்பணி பெண்கள் வழியிலேயே மரணமடைந்திருக்கிறார்கள். பல முதியவர்கள் இறந்திருக்கிறார்கள். இனி இத்தகைய அநியாயமான மரணங் களுக்கு முடிவு ஏற்படும். குழந்தைகள் உயர்கல்வி கற்க சமவெளி பகுதிகளுக்கு சுலபமாக வந்து செல்ல முடியும். மாற்றங் கள் நிகழ்வது மனக்கண்ணில் விரிகிறது. செங்கொடியின் போராட்ட வரலாற்றில் இப்போராட்டம் மற்றொரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதற்கு பிறகாவது, வன உரிமைச் சட்டத்தை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக அமுல்படுத்துவதற்கும், இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.