articles

img

அகில இந்திய மாநாடு 4

தியாகி ஆக்னிஸ்மேரி

அதிர வைத்த சிறைப்பறவை

942இல் தோழர் ஏ.பால சுப்ரமணியம் தமது கட்சிப்பணியை திண்டுக்கல் நகரில் துவக்கினார். அக்காலத்தில் தோல் ஷாப்புகளில் பணியாற்றியவர்களில் பெரும்பான்மையினர் தலித் தொழிலாளர்கள். சுண்ணாம்பு குழியில் துர்நாற்றத்துடன் ஊறும் தோலுடன் இரவு பகல் பாராமல் உழைத்து வந்தார்கள். அவர்கள் தீண்டாமைக் கொடுமைகளுக்கும், சமூக கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். தோல்ஷாப்புகளில் வேலை செய்பவர்கள் ஷாப்களுக்கு அருகிலேயே குடியிருப்புகள் அமைக்கப்பட்டு குடியிருந்து வந்தனர். அந்த தொழிலாளர்களை கொத்தடிமைகளைப் போல் முதலாளிகள் நடத்தி வந்தனர். குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களை சங்கத்தில் திரட்ட ஏ.பாலசுப்பிரமணியமும், மற்ற தலைவர்களும் செயல்பட்டு வந்தனர். உயர்ந்த குடும்பத்தில் பிறந்து சட்டம் படித்து தங்களின் உரிமைக்காக செயல்படும் ஏ.பாலசுப்பிரமணியம் மீது தோல் ஷாப் தொழிலாளர்கள் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் வைத்தனர். ஸ்தம்பித்தது திண்டுக்கல் இந்தச் சூழலில் தான் 1946ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத் திற்கு ஆதரவாக தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் வழிகாட்டினார். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் செய்தி காட்டுத் தீயாக திண்டுக்கல் நகர் முழுவதும் பரவியது. தோல் பதனிடும் தொழி லாளர்களும், நகர சுத்தி தொழிலாளர்களும், இதர தொழிலாளர்களும் திரண்டு போராடுவார்கள் எனக் கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மீறி ஆண், பெண் அனைவரும் ஆயிரக்கணக்கில் திரண்டு தோழர் ஏபியை சிறை வைத்திருந்த நகர் காவல்நிலையத்திற்கு முன்பாக கூடி அவரை விடுதலை செய்யக்கோரி போராடினர். அதன்பின்

அது ஆங்காங்கு சாலை மறியலாக மாறியது. திண்டுக்கல் நகரம் ஸ்தம்பித்தது. இதனால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். தனது அதிகாரத்திற்கு சவால்விடுத்த தொழிலாளர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற காவல்துறை அதிகாரிகள் ஆயுத போலீசை வெளியூர்களில் இருந்து வரவழைத்து தோல் பதனிடும் தொழி லாளர்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல்

தொடுத்தனர். பெண்களையும், குழந்தைகளையும் கூட ஈவிரக்கமின்றி தாக்கினர். சவேரியார்பாளையத்தில் தொழிலாளர்களுக்கும், போலீசுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. குடிசைகளை போலீசார் அடித்து நொறுக்கினர். அதை எதிர்த்துப் போராடிய ஆக்னிஸ்மேரியின் அடிவயிறு மற்றும் உயிர்தளத்தில் பூட்ஸ் காலிலும், லத்தியைக் கொண்டும் இரத்தப் போக்கு வரும் வரை தாக்கினார்கள். மேலும் 60க்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர்களையும், 8 பெண்களையும் போலீஸ் கைது செய்து  3 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை சிறையில் அடைத்தார்கள். ஏற்கனவே தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதால் சவேரியார்பாளையம் மக்களையும் ஜாமீனில் எடுக்க முடியாமல் போய்விட்டது. சிறைச்சாலையில் இருந்தபோது பெண் வார்டன், சிறைச்சாலையில் இருந்த பெண்களை கொடுமைப்படுத்தினார். இதை ஆக்னிஸ்மேரி தீரமுடன் எதிர்த்துப் போராடினார். இதனால் பெண் வார்டன் ஆக்னிஸ்மேரி மீது கடும் கோபடைந்தார். ஏற்கனவே போலீஸ் தாக்கியதில் பாதிக்கப் பட்டிருந்த ஆக்னிஸ்மேரி வயிற்றுவலி, இரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனைக்கு முதல் நாளே அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த நாள் ஆக்னிஸ்மேரி இறந்துவிட்டதாக அவரது உடலை சிறைச்சாலையில் உள்ள மரத்தடியில் கொட்டும் மழையில் வீறி எறிந்தனர்.  ஆக்னிஸ்மேரி இறந்த சம்பவத்தை கேட்டு அங்கிருந்த பெண்கள் கதறினர். சிறைச்சாலை காவலர்கள் திட்டமிட்டு ஆக்னிஸ்மேரியை அடித்துக் கொன்று விட்டார்களோ என்று சந்தேகமடைந்தனர்.

அதன்பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்களுக்குப் பின், சிறையில் இருந்த தோல் பதனிடும் தொழி லாளர்கள் 3 மாத சிறைத் தண்டனை முடிவுற்று விடுதலை செய்யப்பட்டார்கள். ஆக்னிஸ்மேரியை இழந்த துக்கத்துடன் கனத்த இதயத்தோடு சிறையில் இருந்து வெளியே வந்தார்கள். தோல்ஷாப் தொழிலாளர்கள் மற்றும் தலித் மக்களின் உரிமைக்காக போராடிய தோழர் ஏபி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வீரத்தோடு போராடி உயிர்நீத்த வீரமங்கை ஆக்னிஸ்மேரி. தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் திண்டுக்கல் நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது திண்டுக்கல் நகரில் சோலைஹால் தியேட்டர் அருகில் உள்ள தெருவின் பெயர் பெரியபறைச்சேரி என்ற சாதியின் பெயரை தாங்கியிருந்தது. அந்த தெருவிற்கு தியாகி ஆக்னிஸ்மேரி தெரு என தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் நகராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் கொண்டு வந்து பெயர் சூட்ட ஏற்பாடு செய்தார். ஆக்னிஸ்மேரியின் தியாகத்தை போற்றுவோம். அவர் வழியில் இயக்க பணிகளை முன்னெடுக்க சபதமேற்போம்.