articles

img

வர்க்க, சாதிய, பாலின ஒடுக்குமுறையின் கோர அடையாளம் - உ.நிர்மலா ராணி, வழக்குரைஞர்

செங்கல்பட்டு இருளர் பெண்கள் மீதான கொடிய வன்முறை

பல காலமாக இருளர் இன மக்களை கொத்தடிமை களாக வைத்து அவர்களது உழைப்பை சுரண்டிய செங்கல்பட்டைச் சேர்ந்த படூர் பாலு  என்ற மர வியாபாரியிடமிருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட  ஆண்களும் பெண்களும் (அவர்கள் உறவினர்கள் கொடுத்த தகவலின் பெயரில்) மாவட்ட நிர்வாகத்தால் 28.4.2023 அன்று, மீட்கப்பட்டனர்.  எந்தவித பாதுகாப்பும் இன்றி, மீட்கப்பட்டவர்கள் அவர வர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் வாங்க படூர் பாலுவும் அவரது அடியாட்களும் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக மிரட்டி உள்ளனர். 3.6. 2023 அன்று கற்பக வள்ளி (பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை படூர் பாலுவும் அவரது ஆட்களும் கடத்திக் கொண்டு போய், சவுக்கு தோப்பில் கட்டி வைத்து அடித்து உதைத்து வழக்கை வாபஸ் பெறுமாறு கட்டாயப் படுத்தி உள்ளனர். மேலும் அவரை மிரட்டி தானும் தன் கணவரும் பாலு வீட்டில் நகைகளை திருடி விட்டதாகவும் அதை மறைக்க பொய்யாக கொத்தடிமை புகார் கொடுத்த தாகவும் வாய்மொழி வாக்குமூலம் வாங்கி வீடியோவும் எடுத்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு பயந்து, மக்கள் கண்காணிப்பகம் மூலமாக செங்கல்பட்டு மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை அணுகி னார். அவரைத் தொடர்ந்து, மற்ற பாதிக்கப்பட்ட பெண்க ளும் அமைப்பை அணுகினர். மாதர் சங்கத்துடன் தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து அவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளன. அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய போது கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் இருளர் இன மக்கள் இன்றும் எவ்வாறு வர்க்க, சாதிய, பாலின ஒடுக்கு முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

கற்பகவள்ளி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் கண வரும் படூர் பாலு என்பவரால் மரம் வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  என்னை பல விதங்களில் மிரட்டி, வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்வார். அதற்கு நான் உடன்படா விட்டால் செருப்பு காலுடன் என்னை மிதிப்பார். என் தம்பி கள் மீது திருட்டுப் பழி போட்டு போலீசில் பிடித்துக் கொடுப் பேன் என்பார். என்னை பார்க்க வந்த எனது அக்காவை யும் வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் உறவுக்கு உட் படுத்தினார். இதன் காரணமாகவே என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். “உன் கணவர் போனால் போகட்டும், நான் உன்னை வைத்துக் கொள் கிறேன்” என்று இழிவாக பேசினார். கடந்த புது வருஷம் இந்த கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டேன். என்னுடன் வேலை பார்த்த என் உற வினர்கள் என்னை காப்பாற்றி விட்டனர். 

அம்மு

4 வருடங்களுக்கு முன்பாக படூர் பாலுவிடம், நானும் என் கணவரும் மரம் வெட்டும் வேலைக்காக சேர்ந் தோம். நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்தாலும் என் கணவருக்கு மட்டுமே, அதுவும் வாரத்திற்கு 300 ரூபாய் மட்டுமே கூலி. லோடு ஏற்றும் நாட்களில் இரவு 10 மணி வரை வேலை வாங்குவார். உடல்நிலை சரி யில்லை என்றாலும் வேலை செய்யாவிட்டால் சாதி பெயரை சொல்லி ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிப்பார். கணவர் லோடு ஏற்றி வேலைக்கு சென்ற பின் நான் தங்கி இருக்கும் குடோனுக்கு வந்து என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்வார். என் உதட்டை கடித்து காயப்படுத்துவார். இதுபோன்று நான்கு வருடத்தில் என்னிடம் 40க்கும் மேற்பட்ட முறை தவறாக நடந்துள்ளார். மறுத்தால் என்னையும் என் குழந்தைகளையும் கண வரையும் அடித்து காலை உடைத்து விடுவேன் என்றும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டுவார். வாங்கிய முன் பணத்தை கட்டி விட்டு போக எங்களால் இயலவில்லை.  4 வருடத்தில் 5 முறை தப்பிச் சென்றோம். அவர் எங்களை எப்படியோ கண்டுபிடித்து தேடி வந்து உதைத்து  மீண்டும் கூட்டிச்சென்று வேலை செய்ய வைப்பார். எங்களைத் தேடி வந்த கார் செலவையும் எங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வார். உணவுக்கு 25 கிலோ ரேஷன் அரிசி வாரம் ஒருமுறை தருவார். அதையும் எங்கள் கணக்கில் வைத்துக் கொள்வார். மளிகை பொருட்களோ காய்கறியோ எங்கள் செலவில் தான் நாங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். என் கணவர் உடல்நிலை மோசமாக இருந்தபோது டாக்டரிடம் போக வேண்டும் என்ற போது “புருஷன் சாகட்டும், உன்னை நான் வைத்துக் கொள்கி றேன்” என்றார். பாலு இல்லாத சமயங்களில் எங்களை கண்காணிக்க மைக்கேல் மற்றும் அவரது அடியாட்கள் இருந்தனர். “போலீஸ், வக்கீல் எல்லாம் என்னை பார்த்து க்குவாங்க. உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று எங்களிடம் கூறுவார்.  

செல்வி

நான் திருமணம் ஆனவள். மூன்று பெண் குழந்தை களும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். எங்களுக்கு சரியான வேலை வாய்ப்புகளோ வருமானமோ இல்லை. படூர் பாலு, மரம் வெட்டும் வேலைக்கு அழைத்துச் சென்றான். அங்கு சென்றதற்கான ஆட்டோ வாடகை, சமைப்பதற்கு சாப்பாடு பாத்திரம், மற்றும் தார்ப்பாய் ஆகியவற்றுக்கு பணம் கொடுத்து அதையும் எங்கள் கணக்கில் வைத்துக் கொண்டான். வேலை செய்யும்போது நாங்கள் சாப்பிடவோ சிறுநீர் கழிக்க ஒதுங்கவோ கூட அனுமதிக்க மாட்டான். ஒருமுறை அவன் மனைவி வீட்டில் இல்லாத சமயம் என்னையும் என் கணவரையும் கூட்டிக்கொண்டு போய் என்னை தனியாக அழைத்து அந்தரங்க பகுதிகளை காட்டுமாறு வற்புறுத்தி னான். நான் மறுத்துவிட்டு வெளியே வந்து விட்டேன். இரவு தூங்கும் போது கூட பாதுகாப்பில்லாத நிலையில் தான் நாங்கள் இருந்தோம்.  என் 14 வயது மகளிடம் பல தடவை “நீ துணியை கழட்டி வைத்துவிட்டு வா படுக்கலாம், நீ சின்ன பொண்ணு தானே, நல்லா தாங்குவாய்” என்று கூறிக் கூப்பிடு வான். மேலும் என் மகளையும் பல வேலைகளில் கட்டா யப்படுத்தி ஈடுபடுத்தி வந்தான். சிறுமி என்றும் பார்க்கா மல் மிகவும் அசிங்கமாக திட்டி என் கண்ணெதிரிலேயே அடிப்பான். இந்த கொடுமையை பாலுவின் மனைவி யிடம் கூறினால் வாங்குன பணத்தை கழித்து விட்டு கிளம்புங்க என்று திட்டுவார்.

அவனின் கொடுமை தாங்காமல் நான் என் கண வரை வற்புறுத்தி நான்கு முறை இரவோடு இரவாக குழந்தைகளுடன் நடந்தே தப்பித்துச் சென்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கு மறைந்து இருந்தாலும் அடியாட்களை வைத்து அடித்து உதைத்து மீண்டும் கடத்திச் சென்று விடுவான். அப்படி  தப்பிக்கும் போது ஒரு முறை ரோட்டில் லாரியை மடக்கி ஏறி செல்லலாம் என்று முயற்சி செய்தபோது பாலு தனது அடியாள் மூலமாக தகவல் தெரிந்து அங்கு வந்து என்னையும் என் கணவரையும் ஊர் மக்கள் முன்னி லையில் கடுமையாக தாக்கினான். அப்போது நான் மூன்று மாதம் கருவுற்று இருந்தேன்.  கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை குனிய வைத்து  நடு முதுகிலேயே தொடர்ந்து கை முட்டியை வைத்து குத்தினான். வாங்கிய பணத்தை பணமாக திருப்பித் தந்தாலும் வாங்க மாட்டேன் என்றும் அவன் சொல்லும் வரை மரத்தை வெட்டி தான் அதை கழிக்க வேண்டும் என்றும் கூறிவிட்டான். இதற்கு மேலும் தப்பிக்க முயற்சி செய்தால் குழந்தைகளின் கை கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டினான்.   இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து அவன் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அந்த சமயத்தில் எங்களை கண்காணிக்க யாரும் இல்லை என்ப தால் நானும் என் கணவரும் குழந்தைகளுடன் நடு இரவில் நடந்தே தப்பிச் சென்றோம். நாங்கள் வைத்திருந்த துணிகள் பாத்திரங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் அங்கேயே விட்டுவிட்டு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று வந்து விட்டோம்.

அகிலா

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பாக என்னையும் எனது கணவரையும் மரம் வெட்டும் கூலி வேலைக்கு படூர் பாலு அழைத்து வந்தான். என் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத போது கூட மருத்துவ உதவி அளிக்க வில்லை. ஒரு முறை வேலை செய்து கொண்டிருந்த போது எனது முட்டியில் கத்தி பட்டு ஆழமான காயம் ஏற்பட்டபோது மருத்துவமனைக்கு செல்ல என்னை அனுமதிக்கவில்லை. அந்த காயத்தோடு தான் வேலை செய்து வந்தேன். பலமுறை என்னையும் என் கணவரை யும் அடித்து வேலை வாங்குவான்.   ஒருமுறை என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எங்களை வீட்டுக்கு அனுப்பவில்லை. எனது அம்மா இறந்த பிறகு கூட எங்களை அனுப்ப மறுத்து விட்டான். என் கணவர் லோடு ஏற்றுவதற்கு வெளியூர் செல்லும் சமயங்களில், நான் தங்குமிடத்திற்கு வந்து என்னை கட்டாயப்படுத்தி, மிரட்டி, என்னை பல இடங்க ளில் தொட்டு, பாலியல் உறவு கொள்வான். மறுத்தால் “இருள சிறுக்கிங்களா! ஊர்ல இருக்கிறவனோட எல்லாம் போவீங்க; என் கூட படுக்க மாட்டீங்களா” என அசிங்க மான வார்த்தைகளால் இழிவுபடுத்துவான்.    இரவு நேரங்களில் வீட்டில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று உள்ளே வந்து என் காலை பிடித்து தர தர என்று வெளியில் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக வல்லுறவு கொள்வான். அவன் திட்டமிட்டு வேறு சாதி ஆட்களை வேலைக்கு கூப்பிடுவதில்லை. விபரம் தெரியாத இருளர் சாதி  மக்களை மட்டும் தான் அவன் வேலைக்கு வைத்துக் கொள்வான். இதனால் படிப்பறிவில்லாத எங்கள் சாதியை சேர்ந்தவர்கள் அவனுக்கு பயந்து கொண்டு அவன் சொல்வதைக் கேட்டு அடிமையாக வாழ்ந்தோம்.

குமாரி

நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே படூர் பாலு என்பவன் எனது அப்பா, அம்மா மற்றும் அக்கா ஆகியோரை மரம் வெட்டும் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றான். அதன் பின்பு நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்த பின்பு கொரோனா லீவு விட்டபோது என்னையும் வேலைக்காக அழைத்துச் சென்று விட்டான். என் அம்மா, அப்பா மிகக் கடினமாக வேலை பார்த்து வந்தாலும் அவர்களுக்கான கூலியை கொடுக்காமல் அடித்து துன்புறுத்தி வந்தான். என் அம்மா தூங்கும் போது அவர் அருகில் படுத்து தொந்தரவு செய்வான். இதனால் எனது அம்மாவும் அப்பாவும் அவரிடம் இருந்து தப்பி சென்று விட்டனர். நானும் என் அக்காவும் அங்கு தான் தங்கி இருந்தோம். தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும்.    இரவு நேரத்தில் தனியாக குடிசையில் வேலை களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது சாராயம் குடித்து விட்டு குடிசைக்குள் நுழைந்து அருகில் படுத்துக் கொள்வான். வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு கொள்வான். நான் தனியாக இருக்கும் போதும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் வன்முறை யில் ஈடுபடுவான். உடன்பட மறுத்தால் கத்தியால் குத்தி விடுவேன் என்று மிரட்டுவான். இதனால் நான் பயந்து அமைதி ஆகி விடுவேன்.   என்னை தவறாக அவன் பயன்படுத்தியதை மறைக்கும் நோக்கில் எனக்கும் என் காதலருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்தான். 

குற்றம் சாட்டப்பட்டவருக்கு உறுதுணையாக உள்ளூர் காவல்துறை

இந்த கொத்தடிமை வழக்கு கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லையிலும் கற்பக வள்ளியை கடத்தி அடித்து மிரட்டிய வழக்கு திருப்போரூர் காவல் நிலைய எல்லையிலும் வருகிறது.6.6.2023 அன்றே கற்பக வள்ளி யின் புகார் பதிவு தபால் மூலமாக இரு காவல் நிலையங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 7.6.2023 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் முன்னி லையில் காவல் நிலையத்தில் நேரடியாகவும் கொடுக் கப்பட்டது. அதன் பிறகு தாக்குதலால் ஏற்பட்ட காயங்க ளுக்கு அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட சமயத்தில் மருத்துவமனையில் இருந்தும் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கை 10.6. 2023 அன்று தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கற்பக வள்ளி தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக தனது புகாரில் ஏழு இடங்களில் குறிப்பிட்டும் பாலியல் வன்கொடுமைக் கான 376 IPC பிரிவு சேர்க்கப்படவில்லை. மேலும் பாலு வின் கொடுமை தாங்காமல் தான் தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டும் தற்கொலைக்கு தூண்டியதாக பிரிவு போடப்படவில்லை. அதேபோல கடத்திச் சென்று சவுக்கு தோப்பில் வைத்து அவரை தாக்கிய விஷயத்தில், கடத்தலுக்கான பிரிவு சேர்க் கப்படவில்லை. அவருக்கு நடந்த சித்ரவதை எதையுமே  காவல்துறை குற்றமாக கருதவில்லை.  முதல் தகவல் அறிக்கை, அதுவும் எஸ்சி - எஸ்டி சட்ட அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட போதும் எதிரி பாலு கைது செய்யப்படவில்லை அவர் நீதிமன்ற பிணை பெறுவதற்கான முயற்சிக்கு தாராளமான கால அவகா சம் காவல்துறையால் கொடுக்கப்பட்டது.

பாலு “அண்ணாச்சியாக” இருந்தவர் பட்டியலினத்தவராக மாறிய ஆச்சரியம்

பட்டியலினத்தில் இல்லாதவர், பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் மீது தாக்குதல் தொடுத்தால் தான் எஸ்சி - எஸ்டி சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்கு தொடுக்க முடியும். படூர் பாலுவின் மனைவி வேறு சாதியை சார்ந்தவர். அவர் தாய் தந்தையர் பட்டியலினத்தவர் என்றால் கூட  தன்னை பட்டியலினத்தவராக என்றுமே தன்னை காட்டிக் கொண்டதில்லை. “பாலு அண்ணாச்சியாகவே” சமூகத்தில் வலம் வந்தார். வழக்கிலிருந்து தப்புவதற்காக அவசர அவசரமாக தனது தாய் தந்தையர் சாதியை சுட்டிக் காட்டி சான்றிதழ் பெறுவதற்கும் அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் மறைக்கப்பட்ட உண்மை

எஸ்சி - எஸ்டி சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு தடை உள்ளது. எனவே நீதிமன்றங்கள் நேரடியாக முன்ஜாமீன் கொடுக்க முடி யாது. மாறாக மறைமுகமாக கீழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் அன்றே அவருடைய பிணை மனுவை விசாரணை செய்து முடிவு செய்ய வேண்டும் என்ற ஒரு  வழிகாட்டுதல்(direction) கொடுக்கப்படும். 15 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்படும்.  இந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி மனுசெய்கிறார். நீதிபதி யிடம் வழக்கின் பின்னணி குறித்தும் கொத்தடிமையாக பலர் மீட்கப்பட்டது குறித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் இருந்த தகவல்கள் குறித்தும் காவல்துறையோ அரசு வழக்குரைஞரோ முறையிடவில்லை . அப்படி முறையிட்டிருந்தால் நீதிபதியின் தீர்ப்பில் அது குறிப்பிடப் பட்டிருக்கும். இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி, வழிகாட்டுதல் கொடுத்து விடுகிறார். எஸ்சி- எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் முன்ஜாமீன் கொடுப்பதற்கு தடை இருப்பதாலும் இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய் யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாலும் இந்த உத்த ரவை கொடுப்பதாக வெளிப்படையாகவே குறிப்பிடுகி றார். இது நீதித்துறையின் சமூக கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.  கற்பக வள்ளி கொடுத்த புகாரையோ, முதல் தகவல் அறிக்கையையோ நீதிபதியும் படித்துப் பார்க்கவில்லை யோ என்று தோன்றுகிறது. பாலியல் வன்கொடுமை பிரிவு, உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இல்லை. 22.6.2023 அன்று பிரிவு மாற்றல் அறிக்கையின் மூலமாக இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறுகிறது. இந்த விபரமும் நீதிமன்றத்தின் கவனத் திற்கு கொண்டு செல்லப்படவில்லை.

ஐந்து தனி புகார்களுக்கு ஒரு  எஃப் ஐ ஆர் மட்டுமே போட்ட காவல்துறை

23.6.2023 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட பெண்களும் சென்னையில் டிஜிபி அவர்களை சந்தித்து தனித்தனியாக புகார் கொடுக்கிறார்கள். கற்பக வள்ளி யின் புகார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால், மற்ற நான்கு பெண்களின் புகார்கள் அன்றைய தினமே  கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் புகாரின் பேரில் தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வில்லை. காவல்துறையை விசாரித்த போது ஒரு புகாரை தான் பதிவு செய்ய முடியும் என்றும் மற்றவர்களின் புகார்க ளை கற்பக வள்ளி வழக்கு புலன் விசாரணையில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடைமுறையிலிருந்து படூர் பாலுவை காக்கவே இவ்வாறு காவல் துறை செய்கி றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் 5 பேரும் ஒரே நபரால் பாலி யல் வன்முறைக்கு ஆளாகி இருக்கலாம்; ஆனால் அது வெவ்வேறு இடத்தில், நேரத்தில், காலகட்டத்தில், சூழ் நிலையில், வெவ்வேறு முறையில் நடந்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு. சாட்சிகளும் வேறு.  மேலும் பாதிக்கப்பட்ட அம்முவின் வயது 18 வயதுக்கு உட்பட்டதாக இருப்பதால் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.

கைது செய்ய தடை இல்லை, ஆனால் மனம் தான் இல்லை

உயர்நீதிமன்றத்தில் பிணைக்கான வழிகாட்டுதல் பாலியல் வன்முறை (376 IPC) என்ற குற்றத்திற்கு பெறப் படவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிபதி முன்பு கொடுத்த வாக்குமூலங்களிலும் பாலியல் வன்முறை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே குற்றம் சாட்டப் பட்டவரை இந்த பிரிவுக்காக கைது செய்வதில் எந்த சட்ட ரீதியான தடையும் இல்லை. ஆனால் காவல்துறைக்கு மனம் தான் இல்லை.  மாறாக குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவர் மீது திருட்டுப் புகார் கொடுக்கவும் அவர்களுடைய நடத் தையை களங்கப்படுத்தவும் காவல்துறை ஆலோசனை வழங்கி வருவதாக தகவல்.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை

இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ஜனநாயக அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் வலியுறுத்தியதன் அடிப்படையில் நிவாரணங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்குவதற்கான வீடுகள் கூடிய விரைவில் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் கவனத்திற்கு...

நடந்த விஷயங்களை பார்க்கும் போது உள்ளூர் காவல் துறை, குற்றவாளிக்கு துணை போவது வெளிப்படையாக தெரிகிறது. எனவே நேர்மையான புலன் விசாரணையை உறுதிப்படுத்தும் வகையில் வேறு துறைக்கு வழக்கை மாறுதல் செய்வது அவசியமானது. அதே நேரத்தில், கடமை தவறிய காவல்துறையினர் மீது விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும்.  கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட வர் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அதிகாரமுண்டு. எனவே அந்த வழக்கில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் கூறியுள்ளவாறு செங் கல்பட்டு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து ஜனநாயக அமைப்புகளின் உதவி யோடு கொத்தடிமைகளாக அடைபட்டுக் கிடக்கும் இருளர் இனமக்களை மீட்டு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்க ஆவன செய்ய வேண்டும்.