articles

img

குறுவை நெல் சாகுபடிக்கு அரசு செய்ய வேண்டியவை - சாமி.நடராஜன்

டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு, குறுவை சாகுபடியை துவங்குவதற் கான சூழல் அமைந்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போது வரை 100 அடியை தாண்டி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் இயல்பான இலக்கை விட குறுவை சாகுபடி பரப்பு சற்று கூடுதலாக நடைபெற்றது. இந்த ஆண்டு ஜூன்  12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப் பட வேண்டும். அதோடு கீழ்க்கண்டவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி விவசாயிகளின் நலனை பாதுகாத்திட கோருகிறோம்.

தூர்வாரும் பணிகள்

கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தூர்வாரும் பணிகளுக்கு பல நூறு கோடிகள், ஒதுக்கப்பட்டு அந்த நிதியை முறையாகச் செயல்படுத்தாமல் மேலிருந்து கீழ்வரை ஆளும் கட்சியினர் வாரிக்கொள்வதாகவே இருந்தது. தண்ணீர் திறக்கப்பட்டவுடன் பணிகளை துவங்கி பாதியிலேயே பணிகளை முடித்துவிட்டு முழுப்பணமும் கூட்டுக் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு தூர்வாரும் பணிகளுக்காக சுமார் 80 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தஞ்சை மாவட்டத்தில் 21.03 கோடியில் 170 பணிகளும், திருவாரூர் மாவட்டத்தில் 12 கோடியில் 115 பணிகளும், நாகையில் 3.46 கோடியில் 30 பணிகளும், மயிலாடுதுறையில் 8.71 கோடியில் 49 பணி களும், புதுக்கோட்டையில் 10.5 லட்சத்தில் 5 பணி களும் துவங்கி நடைபெற்று வருகிறது. மே 1ஆம் தேதி துவங்கி மே-31ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளை யும் முடித்துவிட வேண்டும் என அரசு உத்தர விட்டுள்ளது வரவேற்கத்தக்கது.  அதே நேரத்தில் இப்பணிகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க அந்தப்பகுதி விவசாயி களையும் உள்ளடக்கி கண்காணிப்புக்குழுவை அமைத்து கண்காணித்தால் முறையாக பணிகள் நடை பெறுவதை உறுதிப்படுத்தலாம். மேலும் பணிகளை துவங்கும் முன் ஒப்பந்ததாரர்கள், பணியின் திட்ட மதிப்பீடு எவ்வளவு, துவங்கிய நாள், பணி முடிக்கப்பட வேண்டிய நாள் உள்ளிட்ட விபரம் அடங்கிய தகவல் பலகை ஒவ்வொரு பணி நடைபெறும் இடங்களில் வைக்கப்பட வேண்டும். பாசன ஆறுகள், மற்றும் எ பிரிவு, பி பிரிவு வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இதோடு சி பிரிவு வாய்க்கால்களை 100 நாள் பணியாளர்களை கொண்டு  பணிகளை உடன் துவக்கிட வேண்டும். அப்போது தான் தண்ணீர் திறந்தவுடன் குறிப்பிட்ட நாட்களுக் குள் வயல்களுக்கு தண்ணீர் செல்லும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கத் திற்காக பாசன ஆறுகளில் உள்ள பாலங்கள் இடிக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன் முடித்திட வேண்டும். கல்லணைக் கால்வாய் சீரமைப்பு  பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தான் பணிகள் நிறைவுபெறும் என அதிகாரிகள் கூறுகின்ற னர். ஆற்றின் இருகரைப் பகுதியும், ஆற்றின் உட்பகு தியும், கான்கிரீட் போடப்படுகிறது. இதில் ஆற்றின் நடுப்பகுதியில் 5 அடி ஆழத்திற்கு மேல் ரீச்சார்ச் பைப்பு கள் இடைவெளி விட்டு விட்டு முழுவதும் அமைக் கப்பட வேண்டும். தூர்வாரிடும் பணிகள் அனைத்தும் மே 31ஆம் தேதிக்குள் திட்டமிட்டபடி முறையாக அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும். “மாவு பழசுதான் இட்லி தான் புதுசு” என்ற கிராமத்துப் பழமொழி போல்அமைந்து விடாமல் , தூர்வாரும் பணிகள் நடை பெற வேண்டும் என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பு.

சமுதாய நாற்றாங்கால்

ஜூன் 12இல் அணை திறக்கப்பட்டு படிப்படியாக கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு நடைமுறை யில் 20 நாளிலிருந்து 30 நாட்கள், ஆகி விடுகிறது. அதன் பிறகு நாற்றுவிட்டு, குறுவை சாகுபடியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை. எனவே, வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் சமுதாய நாற்றாங் கால் அமைக்கலாம். குறிப்பாக ஒரு பிர்க்காவில் 4 அல்லது 5 இடங்களில் இதுபோல் நாற்றாங்கால் அமைத்து அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு நாற்று வழங்கினால் காலத்தோடு நடவு பணிகளை செய்யலாம். தண்ணீர் விரயத்தை குறைத்திடலாம்.

விதை

குறுவை சாகுபடிக்கு பெரும்பகுதி விவசாயிகள் குறுகிய கால விதை நெல்லைத்தான் பயன்படுத்து கின்றனர். கடந்த காலத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகளை விற்பனை செய்த தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வேளாண்துறை யும் விவசாயிகளுக்கு தேவையான அளவில் விதை களை வழங்க முடியவில்லை. அதிகபட்சமாக 17 சத வீதம் தான் அரசு டெப்போக்களில் விதை விநியோ கம் செய்யப்படுகிறது. இதை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். மானியத்துடன் கூடிய விதை நெல் அதிக அளவில் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்பட வேண்டும். தனியார் விதை விற்பனைக் கடைகளில் தரமான விதை நெல் விற்பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும்.

உரம்

உரத்திற்கான மானியத்தை தொடர்ந்து ஒன்றிய பிஜேபி அரசு குறைத்துக் கொண்டே வருவதால் ரசாயன உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விவ சாயிகள் தொடர் போராட்டங்களுக்கு பிறகு தற்போது  சில உரங்களுக்கான மானியத்தை வழங்குகிறோம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. மேலும் உரத்தட்டுப் பாடு ஏற்படும் போது தனியார் கடைகளில் தாறுமாறாக விலையை உயர்த்தி விற்கின்றனர். எனவே, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனை த்து உரங்களையும் விற்பனை செய்திட வேண்டும்.

பயிர்க் கடன்

நடப்பாண்டு சாகுபடிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்கு வதற்கும், வங்கிகள் செயல்படுவதற்கும் மாநில அரசு ஏற்கனவே கடன் தள்ளுபடி செய்த தொகையினை உடனடியாக மாநில கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கி னால் தான் அந்த தொகையை ஒவ்வொரு மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி அதன் மூலம் விவசாயிகளுக்கு காலத்தோடு பயிர்க்கடன் வழங்க முடியும். பயிர்க்கடன் வழங்கும் போது முழுக்க முழுக்க நகை ஈட்டுக் கடனாக வழங்காமல், சிறு,குறு விவசாயிக ளுக்கு முன்னுரிமை கொடுத்து உண்மையான பயிர்க் கடனாக வழங்குவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். தற்போது பெரும்பகுதி நகை ஈட்டுக்  கடனாகவும், விவசாயக்குழு கடனாகவும் வழங்கப்படு வதை தவிர்க்க வேண்டும்.

விலை

நெல் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. குறிப்பாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை பல மடங்கு உயர்த்துள்ளது. வேலையாட்களுக்கான கூலி யும் உயர்ந்துள்ள நிலையில் கடந்தாண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ரூ.1871 ரூபாய் செலவாகிறது என குறிப் பிட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.1960ம், மாநில அரசின் 100 ரூபாயும் சேர்த்து குவிண்டால் ரூ.2060ம், பொது ரகத்திற்கு ஒன்றிய அரசு குவிண்டாலுக்கு ரூ.1940ம், மாநில அரசின் ரூ.75ம் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.2015ம் மட்டும் வழங்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு விவசாயிகளு க்கு கொடுத்த வாக்குறுதிப்படி குறைந்தபட்சம் ஒரு குவிண்டாலுக்கு 2500 ரூபாய் நடப்பாண்டு விலை கொடுக்க வேண்டும். இதுவே விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையாக இருக்காது. 

கொள்முதல்

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் அனைத்தை யும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் காலத்தோடு கொள்முதல் செய்வதற்கு தேவை யான அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். குறுவை அறுவடைக் காலங்களில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் நடமாடும் கொள்முதல் (Mobile Purchasing) முறையை அதிகப்படுத்திட வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யும் நெல்லை நேரடியாக நெல் அரவை மில்களுக்கு அனுப்பிட வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழையில் நனையவிடாமல் உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குக ளுக்கு அனுப்பிட வேண்டும். மேலும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான டன் நெல் கொள்முதல் செய்யும் போது, அவற்றை அடுக்கி வைப்பதற்கான சேமிப்புக் கிடங்குகள் கூடுதலாக கட்டப்பட வேண்டும். தற்காலிக மாக சேமித்து வைப்பதற்கு  பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடங்களை பயன்படுத்திட வேண்டும். 

பயிர்க் காப்பீடு

கடந்த ஆண்டு குறுவைக்கு பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியது. இந்த ஆண்டு உரிய காலத்தோடு ஒன்றிய அரசு, காப்பீட்டு நிறுவனங்களோடு பேசி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரையும், பயிர்க் காப்பீடு செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். காப்பீடு பீரிமியம் பெறுவதில் கூட்டுறவு வங்கிகளில் நிலவும் குழப்பங்களை போக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

குறுவை தொகுப்பு திட்டம்

குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப் படுத்திடும் வகையில் கடந்தாண்டு வழங்கியதைப் போல் இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு டிஏபி, பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கிட வேண்டும்.  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டும் பயன்பெறாமல், குறுவை சாகுபடி மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இதற்கான நிதியை அதிகப்படுத்திட வேண்டும். இதன் மூலம் குறுவை சாகுபடி பரப்பை இலக்கை விட கடந் தாண்டைப்போல கூடுதல் படுத்தலாம். 

கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

 

;