articles

img

மனிதனின் மரபுவழி கோட்பாட்டை சார்லஸ் டார்வின் வெளியிட்ட 150 வதுஆண்டு....

இங்கிலாந்து நாட்டின் இயற்கை விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் தோன்றி 202 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இயற்கை தேர்வு அடிப்படையிலான உயிரினத் தோற்றம் குறித்து அவர் 1859ல் வெளியிட்ட பரிணாமம் குறித்த “உயிரினங்களின் தோற்றம்” என்னும் நூல் வெளிவந்து 162 ஆண்டு கடந்து விட்டது. அந்த நூலிற்கு சிகரம் வைத்தது போல் “மனிதனின் மரபு வழி தோற்றம்” என்னும் பிரசித்திபெற்ற நூலை வெளியிட்டு 150 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நூல் குரங்கினத்திலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்ததை எடுத்துக்காட்டுகளோடு விளக்கி,அதுவரை இருந்து வந்த படைப்புக் கோட்பாடுகளான மதக் கருத்துக்களைத் தகர்த்தது. 19ஆம்நூற்றாண்டு எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய நூற்றாண்டு என்றாலும் டார்வினின் கண்டுபிடிப்புக்கள் மனிதகுல முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக போற்றப்படுகிறது. எனவேதான் அவர் பிறந்த பிப்ரவரி 12ஆம் நாள் உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களாலும், பகுத்தறிவாளர்களாலும், பொதுமக்களாலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

மருத்துவராக வேண்டும் என்ற பெற்றோரின் கனவோடு கல்வியைத் தொடங்கிய டார்வின், இயற்கையியல் சிந்தனையாளரான தனது தாத்தாவின் ஊக்கமளிப்பின்பேரில் 1831 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் எச்.எம்.எஸ். பீகில் எனும்கப்பலில் பயணித்த டார்வின் இயற்கை ஆர்வலராக மட்டுமல்லாமல், இயற்கையியல் அறிஞராகவும் உயர்ந்தார்.நாம் வாழும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என பெரும்பாலானவர்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்த காலம் அவர் வாழ்ந்த காலம். டார்வினின் பயணத்தின்போது அவர் படித்தல்யேல்ஸ் அவர்களின் “நிலயியல் கோட்பாடுகள்” என்னும் புத்தகத்தில் பாறைகளில் காணப்படும் புதை படிமங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் குறித்த சான்றுஎன விளக்கப்பட்டிருந்தது. அவர் பயணித்த பகுதிகளில் இருந்த உயிரின வகையின் செறிவு மற்றும் நில அமைப்புக்கள் அவரை பெரிதும் பாதித்து சிந்திக்கத் தூண்டியது. கலப்பகோஸ் தீவுகளில் அவர் மேற்கொண்ட பயணம்தான் அவரது சிந்தனையில் ஒரு பெரும் உந்துதலைத் தந்தது. அங்கிருந்த ஒவ்வொரு தீவிலும் அந்த தீவிற்கே உரிய குருவி இனங்கள் பல ஒத்த அம்சங்களையும், சில முக்கிய அம்சங்களில் வேறுபாடுகளையும் கொண்டிருந்ததை அவர் கூர்ந்து கவனித்தார். 

மானுடவியல், உயிரியல், நிலயியல் குறித்தஅவரது அறிவியல் கள ஆய்வேடுகள் பிரேசில், சிலி, பெரு, கலப்பகோஸ் தீவுகள், தகிட்டி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அவர் கண்டறிந்த உள்ளூர் விலங்குகள், தாவரங்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் விரிவான பதிவுகளாக இருந்தன. 1836ல் இங்கிலாந்திற்கு திரும்பிய டார்வின், எப்படி உயிரினங்கள் தோன்றுகின்றன? என்பதைப்பற்றி அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக கடினமாக உழைத்தார். அறிஞர் மால்தூஸ் அவர்களின் கருத்துக்களின் தாக்கத்தால் இயற்கை தேர்வுகள் மூலமாக நிகழ்ந்த பரிணாமக் கோட்பாட்டை முன்மொழிந்தார். தக்க சூழலுக்கு உகந்த விலங்குகளும், தாவரங்களும், உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், அதன் பண்புகளை சந்ததிக்கு கடத்தவும் செய்கின்றன. காலம் செல்லச் செல்ல உயிரிகள் படிப்படியாக மாற்றத்திற்கு உள்ளாகின்றன.

அவரது கோட்பாட்டினையொட்டி ஆய்வுகளை மேற்கொண்டபோது, எப்படி ஒரு தனிஉயிரினம் மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதைபடிப்படியாக புரிந்து கொண்டார். இதிலிருந்து 20 ஆண்டுகள் கழித்தே தனது கருத்துக்களை வெளியிட தகுதியானதெனக் கருதி வெளியிட்டார். இதை அறிந்த மற்றொரு இயற்கையாளர் ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலேச், இதே போன்ற கருத்துக்களை உருவாக்கி இருவருமாகச் சேர்ந்து 1858ல் தங்களது கண்டுபிடிப்புக்களை வெளியிட்டனர்.1859ல் டார்வின் தனது இயற்கை தேர்வு மூலமான உயிரினங்களின் தோற்றம் என்னும் நூலைவெளியிட்டபோது தேவாலயங்களின் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார். ஆனால் விரைவில் அவரது கருத்துக்கள் ஏற்கப்பட்டன. அவரது கோட்பாடுகளை வலியுறுத்தியும், அதன் விளைவு
களை புரிந்துகொண்டும் தனது இறுதிக் காலம் வரை ஒரு கடினமான வாழ்க்கையை டார்வின் எதிர்கொண்டார்.

மனித சமூகத்தின் மிகப்பெரிய மேதைகளுள் ஒருவரான சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கு, கடவுள் நம்பிக்கை அடிப்படையிலான எதிர்ப்பு இன்றளவும் வலுவாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்காக நோபல் பரிசு உள்ளிட்டவற்றை அள்ளிக்குவிக்கும் நாடாகவும், உச்சபட்ச அறிவியல் தொழில் நுட்பத்தை தன்னகத்தே கொண்டுள்ள நாடாகவும் விளங்கும் அமெரிக்காவில்கூட இத்தகைய பகுத்தறிவுச் சிந்தனைக்கு கடும் எதிர்ப்புணர்வு உள்ளது. மரபணுக்களை வரிசைப்படுத்தி, தொகுத்து மரபணு ரகசியங்களை வெளிக்கொணர்ந்து, மரபணுக்களின் கட்டமைப்பை விளக்கியுள்ள நவீன ஆய்வு முடிவுகள்,இந்த பூமியில் தோன்றியுள்ள அத்தனை உயிரினங்களும் ஒரு பொதுவான துவக்கத்திலிருந்தே தோன்றின என்கிற டார்வினின் கோட்பாட்டை மெய்ப்பிக்கின்றன. 

உயிர் வாழ்வனவற்றின் பல்வேறு வடிவங்கள், பயனுள்ள மரபணு மாற்றங்களை தக்கவைத்து தொடர்வதும், கேடு விளைவிப்பவைகள் அழிந்து போதலும் “இயற்கை தேர்வு” என்னும் செயல் வழியில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. பரிணாம கோட்பாட்டிற்கு ஆதரவாக வலுவான அறிவியல் ஆதாரங்கள் இருந்தாலும், பைபிளில் கூறப்பட்டுள்ள படைப்புக் கோட்பாட்டை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. அதேபோல்தான் டார்வினின் பரிணாமக் கோட்பாடானது. 1859ஆம் ஆண்டிலிருந்தே மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் 200 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டின் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியாரும் இயக்குனருமான டாக்டர். பிரவுன் ஒரு கட்டுரையில் “டார்வினைப் புரிந்துகொள்ளாததற்கு இங்கிலாந்து திருச்சபை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது” என்று வெளிப்படையாக எழுதினார்.உலகில் புதிய புதிய கருத்துக்கள் வெளிவரும்போதெல்லாம் மதப் பழமைவாதிகள் எதிர்க்கவேசெய்திருக்கின்றார்கள். அதேபோல்தான் அன்றிருந்த கிருத்தவ திருச்சபையும் எதிர்த்திருக்கிறது. நம் ஊரிலும் ஆன்மீகத்தின் பெயரால் பகுத்தறிவை முடக்கும் செயல்கள் தொடர்கின்றன. அறிவியல்கண்ணோட்டத்திற்கான போராட்டங்களில் பொய்கள் பொசுங்கிப் போகும். அர்த்தமற்ற ஆரவாரங்களும், அபத்தங்களும் ஒரு நாள் நிச்சயம் அடங்கியே தீரும்.

கட்டுரையாளர் : முனைவர் வெ.சுகுமாரன், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி (த), தஞ்சாவூர்
 

;