வெள்ளி, டிசம்பர் 4, 2020

facebook-round

img

கருத்துச் சுதந்திரமும் புண்படும் உள்ளங்களும்....

எதைவேண்டுமென்றாலும், யார் வேண்டுமென்றாலும் குற்றச் செயல் என்று புகார் செய்யலாம் என்றாகிவிட்டது. இவ்வாறு தீவிரமாக உணர்ச்சிவசப்படுவது குறித்து கருத்துக் கூறுவது கூட எதிர்த்தாக்குதல்களுக்கு உள்ளாகக் கூடும். சுதந்திரமான விமர்சனங்கள் ஒரு மதத்திற்குள்ளே இருக்கக் கூடிய, மனித உரிமைகளை மீறக்கூடிய, மோசமான நடைமுறைகளை வௌச்சத்திற்கு கொண்டுவர உதவும்.

ஸதி, வரதட்சணை போன்ற மோசமான மரபுகளை எதிர்த்து சமூக சீர்திருத்தவாதிகள், அந்த மரபுகளுக்காக வரிந்து கட்டியவர்களின் எதிர்ப்பையும் மீறி இயக்கம் நடத்தினார்கள் என்பது வரலாறு. அந்த இயக்கங்களின் காரணமாகத்தான் இந்த மரபுகளுக்கு தடைவிதிக்கும் சட்டங்கள் வந்தன. விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருந்தோமானால், மதச் சடங்குகளிலும் பண்பாடு நடைமுறைகளிலும் உள்ள பிற்போக்குத்தனங்களை விமர்ச்சிப்பதற்குத் தடை விதிப்போமானால் சமுதாய சீர்திருத்தம் சாத்தியமாகாது. மதச் சுதந்திரம் என்பது மாறுபட்ட கருத்துகளை தாங்கிக் கொள்வதோடு இணைந்ததுதான். விமர்சனங்களையும் பகுத்தறிவு விளக்கங்களையும் ஒடுக்குவது ஒரு பக்கம் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கிறது. இன்னொரு பக்கம் சமூக சீர்திருத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆம், ”புண்படுத்தப்படாமல்” இருப்பதற்கான உரிமை எதுவும் இல்லை.

எப்படி கோவில், மசூதி, சர்ச் போன்ற வழிபாட்டு வளாகங்கள் மீது களங்கம் செய்வது குற்றமோ, தவறோ அதே போல தான் எந்த ஒரு தலைவரின் அல்லது ஆளுமையின் சிலைகள் வாழ்விடங்கள் மீது அசிங்கம் செய்வதும். ஆனால் சமூக சீர்திருத்த வாதிகள், பகுத்தறிவாளர்கள் மீது விமர்சனம் செய்வது தவறு என்று எந்த பகுத்தறிவாளரும் கூறமாட்டார். வாதத்தை வாதம் கொண்டு தான் சந்திக்க விரும்புவார். அதே போல தான் எந்த ஒரு நம்பிக்கை அல்லது கருத்து குறித்தும், ஆபாசங்கள் இன்றி, காழ்புணர்ச்சி பகமை உணர்வு வெறுப்பு தூண்டுதல் இல்லாமலும், விமர்சனங்களை வெளிபடுத்துவதும் ஜனநாயகத்தின் அடிப்படை மாண்பு.. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான வழியும் கூட. எனினும் சுதந்திரமான பேச்சுரிமை மீது ” நியாயமான கட்டுப்பாடுகள்” விதிப்பதென்பது நியாயமான முறையில் நடைபெறுவதில்லை. ஆகவே பேச்சுரிமையையும் சிந்தனை உரிமையும் ஒடுக்குகிற சூழல் ஏற்படுத்தப்படுகிறது.

மீண்டும் மீண்டும் 295ஏ சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்துவதன் காரணமாக பொதுவெளி என்பது மேலும் மேலும் சுருங்கி வருகிறது என்பது வெளிப்படைஇந்த சட்டப்பிரிவு திரும்ப திரும்ப தவறாக கையாளப்பட்டு வந்தாலும் கூட, இதனை அப்படியே கைவிடுவது என்பது எதிர்மறைவிளைவுகளை ஏற்படத்தக்கூடும். ஏனென்றால் உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட முறையில் பகைமைப் பேச்சுகள் கிளப்பி விடப்படுகின்றன என்பது நடைமுறை உண்மை.

சில மதப்பழக்கங்கள் குறித்து பகுத்தறிவாளர்கள் முன்வைக்கக் கூடிய கடுமையான விமர்சனங்கள் மனித நேயத்தின் அடிப்படையில் எழுபவைதான். அந்த விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக சீர்திருத்தங்களுக்கு இட்டுச் செல்லக் கூடும். அதேநேரத்தில் சிலரின் மனது புண்படக்கூடும். ஆயினும் இந்த விமர்சனத்தின் நோக்கம் அந்த குறிபிட்ட நபர்களை ஒழிப்பது அல்லது ஒடுக்குவது என்ற நோக்கம் இல்லை.
சமூக நீதியற்ற, பகுத்தறிவுக்கு புறம்பான, உரிமை மறுக்கும் போக்கு, கருத்து முதலியவற்றை நீக்குவதே இலக்கு. எடுத்துகாட்டாக ஜோசியத்தின் தருக்க போதாமையை குறித்து பேசும்போது ஜோசியத்தை நம்புவர்களின் மனதை தட்டி எழுப்புவது தான் நோக்கமே தவிர அவர்களைக் கொன்று குவிப்பது அல்ல. ஜாதிய வன்மம், ஆணவக்கொலைக்கு எதிராக போராடும்போதும் குற்றம் புரிந்த அந்தக் குறிபிட்ட நபர்களுக்குச் சட்ட ரீதியிலான தண்டனை பெற்று தருவது என்பதே பகுத்தறிவாளர்களின் நோக்கம். குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சார்ந்தவர்களின் மனதை தட்டிஎழுப்பி சீர்திருத்தம் செய்வதும் நோக்கம். எந்த ஒரு மனித குழுவையும் அவர்களது உரிமையைப் பறித்து ஒடுக்குவது அல்லது நாஜிக்கள் போல அழித்தொழிப்பது என்பது நோக்கம் அல்ல. பகைமைப் பேச்சுகளின் நோக்கம் சீர்திருத்தமும் மனித நேயமும் அல்ல. குறிப்பிட்ட பிரிவினரின் உரிமை மறுப்பு அல்லது இன ஒழிப்பு என்பதே குறிக்கோள். இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது எவ்வளவு தொலைவு சரி?

கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகம் செயல்படுவதற்கான இதர தேவைகளோடும் நிதானமான முறையில் இணைந்து செல்ல வேண்டும். கனடா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பியா யூனியன் நாடுகளில் உள்ள பகைமைப் பேச்சு தொடர்பான சட்டங்களை முன் மாதிரியாக கொண்டு 295ஏ சட்டப்பிரிவில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய உடனடி தேவை இருக்கிறது. (மதம், பண்பாடு, இனம், இனக்குழு, பாலியல் இணைத்தேர்வு போன்ற) சிறுபான்மை பிரிவினரை அவமதிப்புகளிலிருந்தும் பகைமை வெறியிலிருந்தும், பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதை மனதில் கொண்டதாக மதம் பற்றிய விமர்சனங்களும் பண்பாட்டு நடைமுறைகள் குறித்த விமர்சனங்களும் நிதானமான முறையில் அமையவேண்டிருக்கிறது.

- Venkateswaran Thathamangalam Viswanathan

;