தமிழகம்

img

மின்கட்டணக் கொள்ளையை கேள்வி கேட்டால் பசப்புவதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை:
மின் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கறுப்புக்கொடி அறப்போர் குறித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்த் தொற்று ஒரு பக்கம் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அரசு மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கொள்ளை நோய்க் காலத்தில் மக்களைக் காக்கத் தவறிய மாநில அரசு, மின்கட்டணம் என்ற பெயரால் அநியாயக் கொள்ளை நடத்திக் கொண்டு இருக்கிறது.இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருவாயும் இல்லை.

அதை மனதில் வைத்து மின்கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி அரசு மின் கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி, தன் பங்குக்கு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.இதனைக் கேள்வி கேட்டால், மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று பச்சைப் பொய்யை அறிக்கையாக வெளியிடுகிறார் மின் துறை அமைச்சர் தங்கமணி. பொதுமக்கள், மின் கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டு, அதனால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அமைச்சர் பார்க்கவில்லையா? பார்த்து விட்டு மழுப்பிக் கொண்டு இருக்கிறாரா?இத்தகைய மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக  சார்பில் செவ்வாயன்று (ஜூலை 21) காலையில் கண்டன முழக்கம் எழுப்பிக் கண்டித்தோம். கறுப்புக் கொடி தாங்கி தமிழக அரசுக்கு எதிர்ப்பைக் காட்டினோம். திமுகவினர் மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கெடுத்தார்கள்.இதன் பிறகாவது மின் கட்டணத்தை ஒழுங்கு படுத்துங்கள். குறையுங்கள்; சலுகை காட்டுங்கள்; மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

;