world

img

மீட்புப்பணிக்கு பணமில்லை கைவிரிக்கிறது பாகிஸ்தான்

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்குப் போதுமான பணம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கைவிரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 1,700 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகமாகும். மொத்தமுள்ள பாகிஸ்தான் மக்கள் தொகையான 22 கோடிப்பேரில் சுமார் மூன்றரைக்கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எங்கள் பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கான எதையும் செய்யும் நிலையில் நாங்கள் இல்லை என்று பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரகுமான் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு உதவ வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், "தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவு, இதுவரையில் வரலாற்றில் காணாத ஒன்றாகும். 70 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 82 லட்சம் பேருக்கு உடனடியாக மருந்துகள் தேவைப்படுகின்றன. பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் கூடுதலாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் புதிய நெருக்கடிகளையும் உருவாக்கியுள்ளன. சூழ்ந்துள்ள நீர் இன்னும் வடியாததால் நோயால் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. பட்டினி அதிகரித்திருக்கிறது. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் மேற்கூரைகள் இல்லாத வெளியிடங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் மற்றும் தோல் சார்ந்த தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.

;