world

img

பிளாஸ்டிக்கை மக்க செய்யும் நொதி கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

பிளாஸ்டிக்கை 16 மணி நேரத்தில் மக்கச் செய்யும் வேதிப்பொருளை (நொதி) ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்து மட்க 450 ஆண்டுகள் ஆவதால் அது சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வாக, பிளாஸ்டிக்கை 16 மணி நேரத்தில் மட்கச் செய்யும் பாலியஸ்டர் ஹைட்ரலேஸ் (PHL7) என்ற நொதியை ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கல்லறையில் மட்கிய பொருள் ஒன்றிலிருந்து இந்த நொதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த நொதியை தங்கள் ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்ற விஞ்ஞானிகள் நிகழ்த்திய சோதனையில் அந்த நொதி 16 மணி நேரத்திற்குள் பாலிஎதிலீன் டெரெப்தாலேட்டை (PET) 90% சிதைக்க முடிந்தது என்பதைக் கண்டறிந்தனர்.

பிளாஸ்டிக்கை மக்கச் செய்ய ஜப்பானில் 6 ஆண்டுகளுக்கு முன்பே LLC என்ற ஒரு நொதி கண்டறியப்பட்டதாகவும் ஆனால் தாங்கள் கண்டறிந்துள்ளது அதை விட 2 மடங்கு வேகமானது என்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக்குகளை சிதைக்க PHL7க்கு எந்த வினையூக்கிகளும் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு பிளாஸ்டிக் பயன்பாட்டில் உலக அளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறைகளை நிறுவுவதில் இந்த கண்டுபிடிப்பு முக்கிய பங்களிப்பைச் செய்ய முடியும் என்று லீப்ஜிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் வொல்ப்காங் ஜிம்மர்மேன் கூறியுள்ளார்.

 

;