'கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து உட்கொண்ட 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இந்த மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், 'கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து உட்கொண்ட 1 முதல் 7 வயதுடைய 20 குழந்தைகள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தும் 'டை எத்திலின் கிளைகால்' என்ற உயிர்கொல்லி ரசாயனம் 48 சதவீதத்திற்கும் அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த மருந்து விற்பனைக்கு தடை விதித்துள்ளன.
இதை தொடர்ந்து இம்மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்திய சுகாதார அதிகாரிகளின் உறுதிப்படுத்தலின் அடிப்படையில், கோல்ட்ரிஃப் மருத்து குறித்த உலகளாவிய எச்சரிக்கையின் தேவையை பரிசீலிக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
