world

img

சாக்லேட் மூலம் பரவும் புதிய வகை நோய்-எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்  

லண்டனில் பெல்ஜியம் சாக்லேட் மூலம் சால்மோனெல்லா நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  

உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற சாக்லேட்டுகளின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பெல்ஜியம் சாக்லேட். பெல்ஜியத்திலிருந்து சுமார் 113 நாடுகளுக்கு இந்த சாக்லேட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  

இந்தநிலையில், பிரிட்டனில் பெல்ஜியம் சாக்லேட் மூலம் சால்மோனெல்லா நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 150 குழந்தைகள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட 11 நாடுகளில் இந்த தொற்று பதிவாகியுள்ளது.  இந்த வகை பாக்டீரியா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்கு கீழ் உடையவர்கள் என்றும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்தனர். மேலும் இந்த தொற்றால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.  

இது தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், சால்மோனெல்லா நோய் என்பது பாக்டீரியா தொற்று ஆகும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல்களில் காணப்படுகிறது. டைப்பாய்டு காய்ச்சலும் இந்த பாக்டீரியா மூலம் தான் ஏற்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட 2 மணிநேரத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும்.  

பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் தரமற்ற உணவு மூலம் பரவிவந்ததையடுத்து தற்போது சாக்லேட் மூலம் இந்த நோய் பரவி வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.      

;