சனா, மே 9- ஒரே நாளில் 200 முறை போர் நிறுத்த மீறல்களில் சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகள் ஈடுபட்டனர் என்று ஏமன் ராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். ஏமன் தலைநகர் சனாவில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனையின் பேரில் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தத்தை சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டுப்படைகள் மீறியுள்ளன என்றும், அத்தகைய மீறல்கள் மிகவும் அப்பட்டமாகவும், பெரும் அளவிலும் இருக்கின்றன என்றும் அவர் கூறினார். ஒரே நாளில் 200 முறை மீறியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களையும் அவர் பட்டியலிட்டார். மாரிப், டைஸ், ஹஜ்ஜா, ஜாப், சாடா, தாலே மற்றும் பய்டா உள்ளிட்ட மாகாணங்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின. சுமார் 80 போர் விமானங்கள் இந்தப் பகுதிகள் மீது குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன.
ஆளில்லா விமானங்களும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதில் சில மாகாணங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதல்களின் எண்ணிக்கை மட்டும் நூறைத் தாண்டுகிறது. இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்தத் தாக்குதல்களை நிறுத்துமாறு ஏமன் கோரிக்கை வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனையின்பேரில் போடப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், சவூதி அரேபியாவும், அதன் கூட்டணி நாடுகளும் மீறுவது சரியல்ல என்றும், சர்வதேச சமூகம் இதைக் கண்டிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. மனிதாபிமான ரீதியில்தான் இந்த போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஏமன் படைகள் பதில் தாக்குதல்களை நடத்தத் தயங்காது. எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவான இடத்தில்தான் படைகள் தற்போது உள்ளன என்றும் ஏமன் அரசியல் தலைவர்களில் ஒருவரான அலி அல் ககும் தெரிவித்துள்ளார்.
தொடரும் கொள்ளை
ஏமனுக்கு பெட்ரோலியப் பொருட்களை எடுத்து வரும் கப்பல்களைத் தொடர்ந்து சட்டவிரோதமாக சவூதி அரேபியா கைப்பற்றியுள்ளது. ஏமன் பெட்ரோலிய நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான எஸ்ஸாம் அல் முடாவாக்கி இதைத் தெரிவித்துள்ளார். 31 ஆயிரத்து 959 டன் டீசலுடன் ஏமனை நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை கைப்பற்றியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தக் கப்பல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் சோதனை செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்ட ஒன்றாகும்.