world

போதைப் பொருட்களை சகிக்க மாட்டோம்

ஹவானா, ஜூன் 28- போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதியான நிலைபாட்டைத் தாங்கள் வைத்திருப்பதாக  கியூபா உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் போதைப் பொருட்களைக் கடத்துவதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து, எதிர் நடவடிக்கைகளை கியூபா முடுக்கி விட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் அந்நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ்-கானெல் நேரடியாகத் தலையிட்டுள்ளார். எதிர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் ஏற்பாடுகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “போதைப் பொருட்களை முற்றிலும் எதிர்ப்பது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கின்றன. உலக அளவிலான போதை எதிர்ப்பு நடவடிக்கைகளில் பிற நாடுகளுடன் கியூபா இணைந்து நின்று போராடும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கியூபாவின் கிரான்மா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில், “சர்வதேச அளவிலான போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் கூட்டாளியாக கியூபா தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் சட்டவிரோத போதைப் பொருட்களைக் கடத்துவதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளன என்று கியூப சுங்கத்துறையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான நெல்சன் குடியெரெஸ் அகோஸ்டா கூறியிருக்கிறார்.