world

உலகச் செய்திகள்

விலை உயர்வு காரணமாக உத்தரவாதமான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த பிரான்ஸ் அரசு முடிவு செய்திருக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஊதியத்தை 2.65 விழுக்காடு அளவிற்கு உயர்த்துகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கான மொத்த ஊதியம் தற்போது 10.57 யூரோவாக உள்ளது. அது 10.85 ஆக உயர்கிறது. வரும் மே 1 ஆம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும்.

எரிபொருட்களை தாராளமாகப் பெற்றுக் கொள்ளும் வழக்கத்திற்கு முடிவு கட்ட இலங்கையின் சிலோன் பெட்ரோலியக்கழகம் முடிவு செய்தி ருக்கிறது. ஒவ்வொரு முறையும் இலங்கை ரூபாயில் 1,000 ரூபாய் (அமெரிக்க டாலரில் 3.2) மதிப்புள்ள எரிபொருளை இரு சக்கர வாகனங்களுக்குத் தர முடிவு செய்திருக்கிறார்கள்.  மூன்று சக்கர வாகனங்களுக்கு 1,500 ரூபாய்க்கும், நான்கு  சக்கர வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கும் எரிபொருள் நிரப்பப்படும். இந்தத் தகவலை சிலோன் பெட்ரோலியக்கழகத்தின் தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் மக்கள்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2021 ஆம்  ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 6 லட்சத்து 44 ஆயிரம் பேர் குறைவாக இருக்கிறார்கள். 2021 அக்டோபர் 1 ஆம் தேதியன்று ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடியே 55 லட்சத்து 2 ஆயிரமாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாகவே மக்கள் தொகையில் குறைவை ஜப்பான் சந்தித்து வருகிறது. ஜப்பானில் வசித்து வரும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.