world

கொலம்பியா ஜனாதிபதி தேர்தல் இடதுசாரி வேட்பாளர் யார்?

பொகோடா, ஜன.23- மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிக்காற்று வீசி வரும் நிலையில் கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. கொலம்பியாவில் தற்போது இவான் டியுக் மார்குவஸ் ஜனாதிபதியாக இருக்கிறார். மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறார்.  அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மே 29, 2022 அன்று நடைபெறவுள்ளது, வழக்கம்போலவே, பிற மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருப்பது போலவே,  கொலம்பியாவிலும் இடதுசாரி மற்றும் வலதுசாரி வேட்பாளர் களுக்கு இடையில்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.

கொலம்பியாவின் இடதுசாரிக்கட்சிகள் நல்ல ஒருங்கிணைப்பை இம்முறை ஏற்படுத்தியதோடு, மேலும் பல ஜனநாயக சக்திகளை இணைத்துள்ளன. ஹிஸ்டாரிக் பேக்ட் என்ற பெயரில் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். வரும் தேர்தலில் தங்கள் கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது என்பதை மார்ச் 13 அன்று நடைபெறவிருக்கும் முதல்கட்ட தேர்தலை தங்களுக்குள் நடத்திக் கொள்ளப்போகிறார்கள்.  ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவரும், செனட் அவையின் உறுப்பினருமான குஸ்தவோ பெட்ரோவும், சுற்றுச்சூழல் பெண் போராளி பிரான்சியா மார்குவசும் களத்தில் இருக்கிறார்கள். இவர்களில் யாரை இடதுசாரிக் கூட்டணி சார்பில் நிறுத்துவது என்று மார்ச் 13 அன்று முடிவு செய்யப் போகிறார்கள். ஊழல், ஆணாதிக்க சமூகம், தூய்மையான எரிபொருள் உள்ளிட்ட பிரச்சனைகளை இடதுசாரிகள் முன்வைப்பார்கள் என்று பெட்ரோ தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்புகள் இடதுசாரி ஜனாதிபதி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கின்றன. அப்படி வென்றால் முதன்முறையாக இடதுசாரி ஒருவர் ஜனாதிபதியாகப் பொறுப் பேற்பார்.

;