world

img

கவலையுடன் இருக்கிறோம் அமெரிக்க மக்கள் கருத்து

வாஷிங்டன், மே 24- அமெரிக்காவின் பொருளாதார நிலை குறித்து பெரும் கவலையுடன் இருப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி சிபிஎஸ் என்ற ஆய்வு நிறுவனம் அந்நாட்டு மக்கள் மத்தியில் ஒரு ஆய்வை நடத்தியது. மே 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் பல்வேறு வினாக்கள் வடிவத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த நாற்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் எகிறியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களே பொருட்களை வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்தான் இந்த ஆய்வு நடந்துள்ளது. கருத்து தெரிவித்தவர்களில் 69 விழுக்காட்டினர், பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆய்வில் இந்தக் கருத்தைத் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 49 விழுக்காடாக இருந்தது.

கருத்துச் சொன்னவர்களில் 60 விழுக்காட்டினர் பொருளாதாரத்தைக் குறித்துக் கவலைப்படுவதாகவும், விரக்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஆய்வுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. மோசமான பொருளாதார நிலை ஏற்பட்டதற்கு தற்போதைய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்ற இடைத்தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மக்கள் கருத்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாற்பது ஆண்டுகாலம் பார்க்காத பணவீக்கம் என்பதையும் விட, அது கீழே போகாமல் தொடர்ந்து அதிகமாகவே இருப்பது ஜோ பைடன் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. 30 விழுக்காட்டினர் மட்டுமே ஜனநாயகக் கட்சியினர் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முனைந்து நிற்கிறார்கள் என்றும், அதைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு சொல்கிறது. இதைத் தங்களுக்கு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் குடியரசுக்கட்சியினர், நவம்பர் தேர்தல் பரப்புரையில் இதை முன்வைத்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளனர்.

;