world

img

இந்தியாவில் பாலின ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கும் வேலை இழப்பு

உலக அளவில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.2 கோடி வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த வேலை இழப்பு பாலின பாகுபாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. உயர் வருமானங்கள் கொண்ட நாடுகளின் வேலைநேரங்கள் ஓரளவு அதிகரித்தாலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வேலை நேரம் 3.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேசமயம் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வேலைநேரங்கள் 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவிலும் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் வேலையிழப்பு சாமானிய மக்களின் வாழ்வில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 
“இந்தியாவில் கொரோனா பேரிடருக்கு முன் வேலைசெய்த 100 பெண்களில் சராசரியாக 12.3 சதவிகிதம் பெண்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு 100 ஆண்களில் சராசரியாக 7.5 சதவிகித ஆண்கள் தங்களது வேலை இழந்துள்ளனர் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து இந்தியாவில் வேலை இழப்பிலும் கணிசமான பாலின ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி உள்ளதை காணமுடிகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும், சம்பளமும் இல்லை. சமூக பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதனால் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியும் குறைந்துவிட்டது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. 
இந்நிலையில் தொழிலாளர்களின் வாங்கும் திறனை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு கௌரவமான வேலைகளையும், ஊதியங்களையும் வழங்க வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
 

;