world

img

தடுப்பூசிக்கு 92.28 விழுக்காடு திறன் கியூபாவின் உலக சாதனை

ஹவானா, மே 16- மூன்று தவணைகள் அப்டாலா தடுப்பூசி செலுத்தியபின்பு கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்பில் 92.28 விழுக்காடு திறன் இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இந்த உலகச் சாதனையை எட்டியதற்கு கியூப மருத்துவர்களைப் பாராட்டுவதாக கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்  செயலாளரும், கியூபக் குடியரசின் ஜனாதிபதியுமான மிகுவேல் டியாஸ் கானல் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “இந்தச் சாதனையைப் பார்க்கும்போது முதலில் நான் ஒரு கியூப நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், உங்களைப் போன்ற சாதனையாளர்களை சக குடிமகன்களாகப் பெற்றவன் என்ற முறையிலும் பெருமை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

தடுப்பூசியின் தேவை பற்றிப் பேசிய அவர், “பெருந்தொற்று தொடங்கியபோதே, இதற்கான தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்குக் கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதை சரியாகவே கணித்தோம். பணக்கார நாடுகளின் முன்னுரிமை பணக்காரர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில்தான் இருக்கும். எனவேதான் எங்கள் விஞ்ஞானிகளிடம் நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். விஞ்ஞானிகள் சாதனை படைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காக்க இந்த தடுப்பூசி உதவும்” என்றார். உலகத்தில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டது. அனைத்து வகையான உதவிகளும் இருந்தன. ஆனால் பெருமளவு நிதி ஒதுக்கீடு இல்லாததோடு, பெருந்தொற்று காலத்திலும் புதிய தடைகளையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் கியூபாவுக்கு இருந்தது.

அவற்றையெல்லாம் மீறி தங்கள் பரிசோதனைகளை கியூப விஞ்ஞானிகள் செய்திருக்கிறார்கள். 48 ஆயிரம் பேர் தன்னார்வத்தோடு இந்தப் பரிசோதனையில் பங்கேற்றனர். பல்வேறு தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கி வரும் உலக சுகாதாரக் கழகம் அப்டாலாவுக்கு இதுவரையில் அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த அங்கீகாரம் பெறுவதற்கு தடுப்பூசியின் திறன் குறைந்தபட்சம் 50 விழுக்காடாக இருக்க வேண்டும். இதுதான் உலக சுகாதாரக் கழகம் நிர்ணயித்திருக்கும் தகுதியாகும். ஆனால் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தடுப்பூசிகளை மிஞ்சும் வகையிலான திறனை கியூபாவின் அப்டாலா பெற்றிருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. உலக சுகாதாரக் கழகத்தின் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் பல்வேறு ஏழை நாடுகளுக்குக் குறைந்த விலையில் தரமான தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.

;