world

img

இரண்டு வேளை உணவுக்கு திண்டாடும் நடுத்தர மக்கள்

இஸ்லாமாபாத், ஜூன் 24- தொழிலாளர்களும், ஏழைகளும் கடும் நெருக்கடியில் உழன்று கொண்டிருக்கையில், பாகிஸ்தானின் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் இரண்டு வேளை உணவுக்குத் திண்டாடும் அவல நிலை உருவாகியுள்ளது என்று பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இடது மாற்று மாநாடு நடைபெற்றது. இதில் பாகிஸ்தானில் உள்ள 16 இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்றன. மாநாட்டில் பேசிய பிரதிநிதிகள், பாகிஸ்தானில் சமூகப் பொருளாதார நிலை சீரழிந்து வருவது குறித்து கவலை தெரிவித்தனர். இந்த மோசமான நிலைக்கு நாட்டின் சிவில் மற்றும் ராணுவத் தலைமையே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர்கள், நாட்டின் நீதித்துறை மற்றும் முதலாளிகள் இந்தத் தலைமையுடன் இணைந்து செயல்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

மாநாட்டில் உரையாற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் இம்தாத் காஜி, “நாட்டின் ஆட்சியாளர்கள் ஏழைகள் மீது சுமையை ஏற்றிவிட்டு, எக்கச்சக்கமாகப் பொருள் செலவு செய்து வருகிறார்கள். நாட்டின் பொருளாதார நிலை படுமோசமாக இருப்பதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஜனாதிபதியில் இருந்து ஆளுநர்கள் வரையிலும், பிரதமரில் இருந்து முதல்வர்கள் வரையிலும், கீழ் மட்டத்தில் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரையில் ஊதியத்தில் பெரும் வெட்டை ஏற்படுத்த வேண்டும். ஐ.எம்.எப் போடும் நிபந்தனைகளைத் தவிர்த்து விட்டு, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கி நாட்டை நடைபோடச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய பலர், “பொதுவாக, நாட்டின் தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் மோசமாகி வரும் நிலைமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வருத்தத்திற்குரிய வகையில், நடுத்தர வர்க்க மக்கள் கூட ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சிரமப்படுகிறார்கள்” என்றனர். இந்த மோசமான மற்றும் நம்பிக்கையிழக்கச்  செய்யும் சூழலிலிருந்து விடுதலை பெற மாற்றுத் தளத்தில் மக்களை ஒன்றுபட்டு நிற்கச் செய்ய வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தனர். மாநாட்டின் நிறைவில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதோடு, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒற்றுமையை இடதுசாரிக் கூட்டணி என்ற இலக்கிற்கு எடுத்துச் செல்ல ஐந்து உறுப்பினர்கள் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கூட்டத்திற்குள், அவரவர் கட்சிகளின் உயர்மட்டக்குழு ஒப்புதலைப் பெற்று வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டணியின் பெயர் மற்றும் நிர்வாக அமைப்பு ஆகியவற்றை அடுத்த மாநாட்டில் தீர்மானிக்கவிருக்கிறார்கள்.

;