world

அதிமுக பொதுக்குழு வழக்கு: இன்றைய நிலவரமும் கலவரமும்

அணைகளின் நீர்மட்டம், தங்கம்-வெள்ளி விலை நில வரம் போன்று நாளேடுகளில் இன்றைய அதிமுக வழக்கு நிலவரம் என ஒரு பகுதியை ஒதுக்க வேண்டிய அளவுக்கு  அதிமுக கட்சி தினந்தோறும் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.  விடுமுறை நாட்களில்கூட இந்த வழக்குகள் நிறுத்தி வைக்கப்படா மல் விசாரிக்கப்படுகின்றன.  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள  எடப்பாடி பழனிச்சாமி ‘இடைக்கால’ என்பதை எடுத்துவிட்டு, பொதுச் செயலாளர் என போட்டுக் கொள்ளலாம் என நினைத்து  தேர்தலை அறிவித்தார். சனிக்கிழமை துவங்கிய வேட்பு மனுத்  தாக்கல் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடையும் என அறி விக்கப்பட்ட நிலையில், எடப்பாடியாரைத் தவிர வேறு யாரும் மனுத்  தாக்கல் செய்யவில்லை. அவருக்கு மேளதாளம் முழங்க மலர் தூவி  வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இப்போதைக்கு மேளதாளத்திற்கு ஆன செலவு வீண் என்ற போதும், மேளதாளத்தை அங்கேயே இருக்கச் சொல்லியுள்ளது எடப்பாடி தரப்பு. ஓபிஎஸ் தரப்பு  அத்துமீறி நுழையக் கூடும் என்பதால், போலீஸ் பாதுகாப்பெல் லாம் கோரப்பட்டது தனிக்கதை.  இதன்படி, போட்டியின்றி எடப்பாடியார் தேர்வு என அறி விக்கப்படும் நிலை உருவாவதை உணர்ந்த ஓபிஎஸ் தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும்; இல்லையென்றால், பொதுச்  செயலாளர் என்று அவரை அறிவித்து விடுவார்கள் என ஓபிஎஸ் அணி யில் எஞ்சியுள்ள மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.ஜே.டி  பிரபாகர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அவசரத்தை கணக்கில் கொண்டு அவசர வழக்காக விசாரணை நடந்தது.  தேர்தல் நடைமுறையை நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்று  கூறிய நீதிபதி, தேர்தல் நடத்தலாம்; ஆனால், முடிவை அறிவிக்கக்  கூடாது என்று கூறியுள்ளார். எனவே, வழக்கு முடியும் வரை எடப்பாடி யார் ‘இடைக்கால’ என்ற முன்னொட்டோடுதான் தொடர வேண்டி யிருக்கும். 

ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் விசித்திரமா னவை. எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும்  அடைய முடியாது என்பது அதில் ஒன்று. ஜெயலலிதா உயிரோடு  இருந்த போது, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் அவர்தான் என விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. வாழ்க்கையே நிரந்தரம் இல்லாத போது, ஒரு பதவி மட்டும் எப்படி நிரந்தரமாகும் என  அப்போது யாரும் யோசிக்கவில்லை. கூடி நின்று ஜே போட்டு விட்டார்கள். இப்போது அதை ஓபிஎஸ் தரப்பு பிடித்துக் கொண்டு,  இப்போதும் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே உள்ள  நிலையில், எடப்பாடி எப்படி பொதுச் செயலாளராக முடியும் என  கிடுக்கிப்பிடி போட்டுள்ளார். அடுத்து, தேர்தல் ஆணையம் ஒற்றைத் தலைமையை அங்கீ கரிக்கவில்லை; இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பதையும் ஏற்கவில்லை என ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. தேர்தல் ஆணை யத்தைப் பொறுத்த வரை அவ்வப்போது, பாஜகவின் கண் ஜாடைக்கேற்பவே அதிமுக விவகாரத்தை அணுகி வருகிறது. சமீபத்தில் அப்படித்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை அருளியது. அதற்கு முன்பு  உச்சநீதிமன்றம் தனது பங்கிற்கு எடப்பாடியார் கூட்டிய பொதுக்குழு  செல்லும்; ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கோடு சேர்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டது. இந்த வழக்கில் எதிர்வரும் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்கியது உள்ளிட்ட தீர்மா னங்களின் கதி என்ன என்பது தெரியவரும். தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிபதி கூறியதை ஓபிஎஸ் தரப்பு  கொண்டாடி ‘நீதி வென்றது, நியாயம் நிலைத்தது’ என பேட்டி  கொடுக்கின்றனர். அதிமுக விசயத்தில் நீதியும் நியாயமும் அன்றா டம் செத்துச் செத்துப் பிழைக்கிறது. கால்பந்தாட்ட மைதானத்தில் உதைபடும் பந்து போல, நீதியும் நியாயமும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அலைந்து கொண்டிருக்கிறது. 

பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து  குஷியான எடப்பாடி தரப்பு, இப்போது தரப்பட்டுள்ள உத்தரவால், ‘வடை போச்சே...’ என வருத்தப்பட்டாலும், எப்படியும் இந்த வடையை சுட்டே தீருவது என சூளுரைத்துள்ளது. பொதுக்குழு தீர்மானத்தின்படி, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் அதிமுகவிலேயே இல்லை என்பது நீதிமன்றத்தில் எடப்பாடியார் தரப்பு வைத்த வாதம். பதிலுக்கு, திடீர் சாம்பார் போல பொதுச்  செயலாளர் தேர்தலை நடத்தலாமா? என்கிறார் ஓபிஎஸ் அணி யைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன். ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டியில் பிக்பாக்கெட் அடிப்பது போல, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முயல்வதாக பொங்கியுள்ளார்.  ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்று இருதரப்பும் கூறுகிறது. அந்த ஒன்றரை கோடி தொண்டர்களோ எங்கிருக்கிறார்கள், யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது மர்ம மாகவே நீடிக்கிறது.

இதனிடையே பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை அநியாயத்துக்கு பொங்கியிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். துண்டைக் கட்டிக் கொண்டு, அதி முக அலுவலக வாசலில் நிற்க முடியாது என்று அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே கட்சியைச் சேர்ந்த நயி னார் நாகேந்திரன் இது அண்ணாமலையின் சொந்தக் கருத்து.  கூட்டணி குறித்து தில்லிதான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். ஏதோ இதுவரை தமிழக பாஜகதான் அனைத்தையும் முடிவு செய்தது போல. அண்ணாமலை கூறியதற்காக அதிமுகவில் யாரும் அதிர்ச்சி யடையவில்லை. மாறாக, பொன்னையன் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக எங்களை விட்டு  தொலைந்தால் போதும் என்ற ரீதியில் பலரும் கருத்து தெரிவித்துள்ள னர். அண்ணாமலை துண்டைக் கட்டிக் கொண்டு வரும் காட்சி யை பார்க்க சகிக்கவில்லை என்பது அவர்களது கருத்து.  மொத்தத்தில் அதிமுகவை பிரித்து மோத விட்டுக் கொண்டி ருப்பது பாஜகதான். விசுவாசத்தில் இரண்டு அணியினருமே ஒரு வரையொருவர் மிஞ்ச முயன்றதே அந்தக் கட்சியின் இன்றைய  நிலைக்கு காரணம். இதை யார் உணர்ந்து முடிவெடுக்கிறார்களோ, அவர்களைத்தான் அந்த ‘ஒன்றரைக் கோடி’ தொண்டர்கள் ஆத ரிப்பார்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாஜகவை எங்கே நிறுத்தி யிருந்தார்கள் என்பதை அதிமுக தொண்டர்கள் மறந்துவிட மாட்டார்  கள்.

- மதுக்கூர் இராமலிங்கம்

;