world

img

‘‘நேட்டோவும் வேண்டாம் - அணுகுண்டும் வேண்டாம்’’

இங்கிலாந்தில் உள்ள ஒரு குட்டி நகரம்.  என்ன திடீரென்று இடி சத்தம் என திகைத்துப் போய் அந்த நகரத்து மக்கள் வானத்தைப் பார்த்தனர். இரண்டு பி-29 ரக குண்டு வீசும் விமானங்கள்தான் சுற்றிக் கொண்டிருந்தன. தங்கள் ஊரைத்தான் குறிவைத்துள்ளன என்ற அச்சத்தில் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர்.  இதுநடந்தது 1949 ஆம் ஆண்டில். இரண்டாம் உலகப் போரின்  பாதிப்புகளில் இருந்து இங்கிலாந்து மீண்டு வந்த நேரமாகும். போர் முடிந்துவிட்ட நிலையில் குண்டுவீசும் விமானங்கள் எதற்காக வந்தன என்ற கேள்விகள் அப்பகுதி மக்களின் மனங்களைத் துளைத்துக் கொண்டிருந்த வேளையில், பயிற்சிக்காக அமெரிக்காவில் இருந்து போர் விமானங்கள் வந்துள்ளன என்றும், விரைவில் திரும்பி விடும் என்றும் அரசு சொன்னது. ஆனால், 73 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அமெரிக்க முகாம்கள் இங்கிலாந்து மண்ணில் வேரூன்றி நிற்கின்றன. அமெரிக்கப் படை வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று 24 ஆயிரம் பேர் இங்கிலாந்தில் இருக்கிறார்கள். தற்போது 13 அமெரிக்கப் படைத்தளங்கள் இங்கிலாந்தில் உள்ளன. 

அதிலும் குறிப்பாக, கிழக்கு இங்கிலாந்தில் மூன்று படைத்தளங்கள் அமைந்திருக்கின்றன. லிபியா, ஆப்கானிஸ்தான் இராக் ஆகிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள் இந்த படைத்தளங்களில் இருந்துதான் இயக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள மக்களில் பலரும் கூட அமெரிக்கப் படைத்தளங்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பத் தொடங்கியிருந்தனர். ஆனால், லேகன்ஹெத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அவர்களின் நிம்மதியைக் கெடுத்தன.  ஜூலை 27, 1956 அன்று நடந்த ஒரு சம்பவத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பி-47 ரக போர் விமானம், தரையைத் தொடுவது போல் வந்து மீண்டும் மேலெழும் பயிற்சியை மேற்கொண்டிருந்தது. நான்காவது முறை தரையைத் தொடுவது போல வந்த அந்த விமானம், மேலெழாமல் அணுகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் புகுந்தது. கட்டிடம் முழுக்க தீப்பிழம்புகள் மற்றும் புகைமயமாக இருந்தது. 

பாலைவனமாக மாறியிருக்கும்

தீ அணைக்கப்பட்ட பிறகு, அணு ஆயுதங்களைச் சோதனை செய்தனர். அவை பத்திரமாக இருந்தன. 6 ஆயிரத்து 800 கிலோ வெடிமருந்துகள் கொண்ட அணுகுண்டுகள் வெடிக்காததால் மக்கள் தப்பித்தனர். ஒருவேளை, இந்தத் தீ விபத்தில் அணு ஆயுதங்கள் வெடித்திருந்தால் கிழக்கு இங்கிலாந்து பாலைவனமாக மாறியிருந்திருக்கலாம் என்று ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி கருத்து தெரிவித்தார். இதே போன்றதொரு சம்பவம் ஜனவரி 1961இல் மீண்டும் நடந்தது. அப்போதும் வெடிவிபத்து நடக்காமல் தப்பித்தனர்.  அப்போதிலிருந்து இங்கிலாந்து மண்ணிலிருந்து அமெரிக்க ஆயுதங்கள் வெளியேற வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 1990களில் அமெரிக்காவின் படைத்தளங்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. மக்கள் போராடி வருவதால் அதன் எண்ணிக்கை தற்போது 13 ஆகக் குறைந்துவிட்டது. அமெரிக்க அணுகுண்டுகள் இங்கிலாந்து மண்ணிலிருந்து வெளியேறின. ஆனால், அண்மையில் அமெரிக்காவின் தலைமையிலான ராணுவக் கூட்டணியான நேட்டோ வெளியிட்ட அறிக்கையில் அணு ஆயுதங்களை இருப்பு வைக்கும் இடமாக பிரிட்டன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் எப்-35ஏ ரக விமானங்கள் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள படைத்தளம் ஒன்றிற்கு வந்திறங்கியுள்ளன. 24 விமானங்கள் இங்கு நிறுத்தப்படும் என்று தெரிகிறது. மீண்டும் அணு ஆயுதங்களை பிரிட்டனில் வைக்கும் திட்டத்துடன்தான் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இதற்கு கிழக்கு இங்கிலாந்தின் இளம் கம்யூனிஸ்டுகள் லீக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் படைத்தளங்களோடு இங்கிருக்கிறார்கள் என்றால், ஆக்கிரமிக்கப்பட்ட நாடாகவே பிரிட்டன் இருக்கும் என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்.  புதிய நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவருமான ஏ.எல்.மார்டன், ‘‘அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களிடம் நாம்தான் சொல்ல வேண்டும். உங்கள் நாட்டுக்குச் செல்லுங்கள். நீங்கள் இங்கே இருக்க வேண்டியதில்லை’’ என்று கூறினார். மீண்டும் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை வைக்கும் கிடங்காக பிரிட்டன் மாறப் போகிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிழக்கு இங்கிலாந்தின் இளம் கம்யூனிஸ்டுகள் அமைப்பு, அந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அந்த ஆயுதங்கள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. மக்களின் பெரும்போராட்டங்களால் அமெரிக்க அணு ஆயுதங்கள் பிரிட்டனிலிருந்து வெளியேறின. பிரிட்டனின் பதின்பருவத்தினர் அத்தகைய அபாயம் என்ன என்றே தெரியாமல் தங்கள் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்கள்.

மீண்டும் அபாயம் சூழ்கிறது

இதனால் பிரிட்டனில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைத்தளங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், வெளிநாடுகளில் உள்ள பிரிட்டன் படைவீரர்களை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், ராணுவச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு செலவழிக்குமாறு கிழக்கு இங்கிலாந்தின் இளம் கம்யூனிஸ்டுகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆதாரம் - இளம் கம்யூனிஸ்டுகள் லீக் 
(கிழக்கு இங்கிலாந்து) 
வெளியிட்டுள்ள அறிக்கை.


 

;