world

img

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஜான் பில்ஜர் காலமானார்

புதுதில்லி, ஜன.1- “பத்திரிகை என்பது மனித நேயம் பற்றியதாக இல்லாவிட்டால் அது ஒன்றுமில்லை. அது மக்களின் வாழ்க்கையைப் பற்றியதாக இருக்க வேண்டும்” என்று கூறிய பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும், சமூக ஆர்வலரும், ஆவணப்பட தயாரிப்பாளருமான ஜான் பில்ஜர் லண்டனில் சனிக்கிழமை (84) காலமானார்.

 பில்ஜர், மிகவும் அற்புதமான மற்றும் அன்பான அப்பா, தாத்தா, சிறந்த நண்பர் என அவரது குடும்பத்தினர், உறவினர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.  

பில்ஜர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டியில் பிறந்தார். அவர் சிட்னியில் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது முதன் முதலாக செய்தித்தாளைத் தொடங்கினார். தொடர்ந்து ஆஸ்திரேலியன் கன்சாலிடேட்டட் பிரஸ்ஸில் நான்கு ஆண்டு பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பில்ஜர் அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவுக் கொள்கைகளை மட்டு மல்ல, ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ நிகழ்ச்சிப் போக்குகளை கடுமையாக விமர்சித்தவர்.

கம்போடியாவில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றிய செய்திகளை வழங்கியதன் மூலம் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

 வியட்நாம் போர்ச்செய்திகள்...
பில்ஜர்,  முதன் முதலில் இத்தாலியில்  ஃப்ரீலான்ஸ் ‘ஏஜென்சி’யை நிறுவினார் (‘இன்டெரெப்’). அதைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் லண்டனுக்கு திரும்பி, ஃப்ரீலான்ஸ் செய்தியாளராக பணியாற்றினார். பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணி யாற்றினார். 1963-ஆம் ஆண்டு லண்டன் டெய்லி மிரர் பத்திரிகையில் சேர்ந்தார்.

தொடர்ந்து அவர் வெளிநாட்டு செய்தியாளராக மாறினார். உலகம் முழுவதும் உள்ள செய்திகளை  வழங்கி வந்தார். குறிப்பாக வியட்நாம் போர் குறித்து அவர்  அளித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன. 1960-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1970களிலும் அமெரிக்காவிற்குச் சென்ற அவர்  அங்கு ஏற்பட்ட பிரச்சனைகளை செய்தியாக்கி னார்.  

1968-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ராபர்ட் கென்னடி படுகொலை செய்யப்பட்டபோது அவர் அதே அறையில் இருந்ததாக அவரது இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படம்

 1979-ஆம் ஆண்டு இயர் ஜீரோ: தி சைலண்ட் டெத் ஆஃப் கம்போடியா திரைப்படம்  உட்பட பல ஆவணப்படங்களை தயாரித்தார்.  ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் அவர்களது நாட்டில் நடத்தப்படும் விதம் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்துள்ளார்.

1967 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் பிரிட்ட னின் சிறந்த பத்திரிகையாளர் விருது மற்றும்  1991- ஆம் ஆண்டில் உண்மை அறிக்கை யிடலுக்கான பாஃப்டாவின் ரிச்சர்ட் டிம்பிள்பி விருது,  அமெரிக்க டிவி அகாதெமி விருது, எம்மி  மற்றும் பிரிட்டிஷ் அகாதெமி விருது உட்பட பல விருதுகளை பில்ஜர் பெற்றுள்ளார். பில்ஜர்,  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் ஆதரவாளர் ஆவார்.

ஃபயர் பிராண்ட் பத்திரிகையாளர்
டெய்லி மிரர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் பியர்ஸ் மோர்கன், பில்ஜரை “ஒரு புத்திசாலித்தனமான ஃபயர்பிராண்ட் பத்திரிகையாளர்”.  என்று புகழ்ந்துள்ளார்.

பிபிசியின் உலக பிரச்சனைகளை தரும்  ஆசிரியர் ஜான் சிம்ப்சன்,  கூறுகையில் “பில்ஜரின் கருத்துக்கள் பலவற்றோடு நான் உடன்பட வில்லை.

ஆனால், அவருடைய எழுத்தின் சக்தியை நான் பாராட்டினேன். என்னிடம் அவர் எப்போதும் அன்போடு இருந்தார் என்றார்”.    சேனல் 4 செய்தி நிறுவனத்தின் முன்னாள் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோ, பில்ஜரை “ஒரு சிறந்த மற்றும் உறுதியான பத்திரிகையாளர்” என்று வர்ணித்துள்ளார்.