world

img

புருண்டி சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து – 38 பேர் பலி

 

புருண்டி நாட்டில் முக்கிய சிறைச்சாலையில் செவ்வாயன்று நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடான புருண்டியின் தலைநகர் கிடேகாவில் நாட்டின் மூன்றாவது மிகப் பெரும் சிறைச்சாலை அமைந்துள்ளது. சுமார் 400 பேர் வரை ஒரே நேரத்தில் அடைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் தற்போது 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலை தீடீரென சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 38 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தற்போது வரை 70க்கும் மேற்பட்டோர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மிக அபாயகரமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த அந்நாட்டு துணை ஜனாதிபதி பிராஸ்பர் பசாம்பான்சா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  

அதேநேரம், இந்த தீ விபத்தில் உயிர்தப்பிய சிறை கைதிகள் சிலர் கூறுகையில், சிறையில் தீ மிக வேகமாக பரவியபோது நாங்கள் கூக்குரல் எழுப்பினோம். நாங்கள் உயிரோடு எரிந்து கொண்டிருக்கிறோம். தயவு செய்து எங்களது சிறை கதவுகளை உடனடியாக திறந்து விடுமாறு காவலர்களிடம் கெஞ்சினோம். ஆனால், எங்கள் சிறை கதவுகளை எக்காரணம் கொண்டும் திறந்து விடக்கூடாது என தங்களது உயர் அதிகாரிகள் தெரிவித்து விட்டதாக கூறி அங்கு பணியில் இருந்த காவலர்கள் கதவை திறக்க மறுத்துவிட்டனர். குறைந்தபட்சம் சிறை கதவுகளை திறந்து விட்டிருந்தால் கூட பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என வேதனையோடு தெரிவித்தனர்.       

;