world

img

கொரோனா பரவலை குறைக்க, உயிரிழப்பை தடுக்க நம்மிடம் கருவிகள் உள்ளன..... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை....

நியூயார்க்:
கொரோனா தொற்று பரவலை குறைக்க, உயிரிழப்பை  தடுக்க நம்மிடம் கருவிகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உருமாற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பி.1.617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. . இந்தியாவில் இந்த வைரஸ் பரவலின் வேகம் கவலையளிப்பதாக உள்ளது. எங்களின் தொற்றுநோய் தடுப்பு குழு, ஆய்வகக் குழுவினர் சேர்ந்து, உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம பணிக்குழுவுடன்  உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஆலோசித்தோம். இந்த வைரஸின் பரவல் தன்மை, இந்தியாவில் பரவி வருவது, மற்ற நாடுகளில் பரவல் சூழல் ஆகியவை குறித்து ஆலோசித்தோம்.

இந்த ஆலோசனை மற்றும் ஆய்வில், பி-1617 வகை வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட அதிகரித்துள்ளது. இதனால்தான் உலகளவில் இந்தியாவில் பரவும் பி.1.617 வகை வைரஸ் பற்றி ஆழ்ந்த கவலை உருவாகியுள்ளது.
பரவல் வேகம் அதிகரிக்கும் என்பது குறித்து எங்களின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, இன்னும் இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்ய அதிகமான தகவல்கள் பெறுவது அவசியம். இந்த வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதை பற்றி எங்களுக்குத் தெரியும். இதுபற்றி இந்தியாவிடமும் தகவல்களை பகிர்ந்து கொள்வோம்.

புதிது புதிதாக உருமாற்ற கொரோனா வைரஸ்கள் இன்னும் தொடர்ந்து வருமா என்பது குறித்து கண்காணித்து வருகிறோம். உலகளவில் இந்த உருமாற்ற கொரோனா வைரஸ்கள் கவலையளித்துள்ளன. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உண்மையாக ஏதாவது செய்ய வேண்டும், தொற்றைக் குறைக்க வேண்டும், உயிரிழப்பை தடுக்க வேண்டும். இதற்கான கருவிகள் நம்மிடம் உள்ளன.  வைரஸ் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைளை உறுதியாக எடுக்க வேண்டும். தனிமனிதர்கள் அளவில் சமூக விலகலைக் கடைபிடித்தல், கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல், காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தல், வீட்டிலேயே பணி செய்தல் போன்றவை வைரஸ் பரவலைத் தடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;