world

img

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு 90 ஆக உயர்வு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 24 ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து மியாமி பகுதியில் குடியிருந்த பல்வேறு குடியிருப்புகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர்.  இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 217 பேரைத் தேடும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்து 18 நாட்கள் கடந்த நிலையில், தற்போது விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது. 

இதுகுறித்து மாயமானவர்களின் குடும்பத்தினரிடம் மியாமி டேட் நகர மேயா் டேனியலா லெவைன் காவா கூறியதாவது. அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்பதற்கான பணிகளை அவசரமாக மேற்கொள்ள மீட்புக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 14 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான கான்கிரீட் மற்றும் குப்பைகள் தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் புதையுண்டவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கும் மேலான நிலையில், உயிருடன் இருக்கக் கூடியவர்களைக் கண்டறிவது என்பது சாத்தியமில்லை என்று மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.  விபத்துக்குப் பிறகு இன்னும் 31 பேரைக் காணவில்லை எனவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

;