world

img

ஐ.நா வேண்டுகோளைத் தொடர்ந்து கூடுதல் வரியை நீக்கியது தெற்கு சூடான்

ஜூபா,மே.5- தெற்கு சூடான் சமீபத்தில் விதித்த அதிக வரிகளை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் அவை   வேண்டுகோள் விடுத்ததை  தொடர்ந்து அவ்வரிகளை நீக்கியது தெற்கு சூடான்.  வறுமை, போர் உள்ளிட்டவற்றின் காரணமாக ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் என உலகம் முழுவதும்    பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக  ஐ.நா அமைப்பை மட்டுமே சார்ந்துள்ளனர்.   இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு சூடானில்  புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அதிக வரிகளின் காரணமாக ஐ.நா அமைப்பு அகதிகளாக உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க நிதிப்  பற்றாக்குறை ஏற்படுவதாகவும், இந்த நிதிப்  பற்றாக்குறையால்  ஐ.நா. அமைப்பை நம்பி வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பை சந்திப்பதாகவும் தெரிவித்தது.  குறிப்பாக சாலை வழியாக செல்ல முடியாத தெற்கு சூடான் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொதிகளை வான்வழியாக போட வேண்டிய சூழல் உள்ளது. இந்த வரி விதிப்பால் வான் வழியே  உணவுப்பொருட்களை வழங்கும் செலவுகள் மிக அதிகமாகிறது.  நிதிப்  பற்றாக்குறையால் உணவு வழங்குவது தடை படத்   துவங்கிவிட்டது என தெரிவித்தது.  கடந்த மார்ச் மாதம் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவது தடைபட்டுள்ளது.இந்த வரியே தொடருமானால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மே இறுதிக்குள் 1 லட்சத்து 35 ஆயிரம்  பேர்களாக உயரும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.  இந்த புதிய வரிகளால் ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் டாலர்கள் வரை செலவுகள்  அதிகரித்து இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்தது. இதன் காரணமாக அதிக வரிகளை நீக்க வேண்டும் என ஐ.நா. வேண்டுகோள் விடுத்தது. ஐ.நாவின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தெற்கு சூடான் தற்போது அந்த அதிக வரிகளை நீக்கியுள்ளது.  தெற்கு சூடானில் உள்ள 1.25 கோடி  மக்களில் 90 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என  ஐ.நா மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;