பாகிஸ்தானில் பாசிசச் சூழல் உருவாக்கப்படுகிறது - இம்ரான் கான்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ராணுவத்தைப் பயன்படுத்தி அந்நாட்டில் சட்டவிரோத மற்றும் பாசிசச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். அவர் போர்ச் சூழலை மட்டுமே உருவாக்குகிறார். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் இது போல மோசமான நிலை இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்தோனியாவில் அரியவகை காந்த உற்பத்தி தொழிற்சாலை திறப்பு
எஸ்தோனியாவில் அரிய வகை காந்தங்க ளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை எரிசக்தித் துறைகளுக்கு அரிய வகை காந்தங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த ‘நியோ பெர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ்’ நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள இந்த ஆலை, ஆண்டுக்கு சுமார் 2,000 மெட்ரிக் டன் காந்தத் தொகுதிகளை உற்பத்தி செய்யும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடி தரும் டிரம்ப்
அமெரிக்காவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான அரசு உதவித்தொகைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் டிரம்ப். அப்பல்கலைக்கழகம் முதலில் தன் சொந்த நிதியில் தான் அரசின் உதவித்தொகையை தர வேண்டும். அதன் பிறகே அப்பணத்தை அரசிடம் வாங்க வேண்டும் என கல்வித்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதன் பணப் பரிவர்த்தனைகள் அரசு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை பண்பாடு ரீதியாக புறக்கணிக்க கலைஞர்கள் அழைப்பு
இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலை பண்பாட்டு ரீதியில் புறக்கணிக்க வேண்டும் என ‘எம்மி’ விருது விழாவில் கலந்து கொண்ட மேற்குலக நாட்டின் கலைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக நடைபெற்ற புறக்கணிப்புப் போராட்டத்தை போலவே இசை, திரைப்படம், பதிப்புத் துறை எனப் பல துறைகளில் இந்த புறக்கணிப்பு இருக்க வேண்டும். அப்போராட்டத்தை போலவே இந்த போராட்டத்திலும் வெற்றி காண வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடன் சிரியா பாதுகாப்பு ஒப்பந்தம்
எல்லை பாதுகாப்பு தொடர்பாக இஸ்ரேலு டன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்காக வாய்ப்புகள் உள்ளது என சிரியா ஜனாதிபதி அஹமது அல்-ஷாரா தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்ட பிறகு அந்நாட்டின் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் சிரியாவின் தெற்குப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேல் ராணுவத்தை வெளியேற்றவும் இந்த ஒப்பந்தம் உதவும் என அவர் கூறியுள்ளார்.