டெல் அவிவ், ஜூலை 15- பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிர மித்துக் கொண்ட கிழக்கு ஜெருச லேம் பகுதியில் புதிதாக 450 குடியி ருப்புகளை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதற்கு பாலஸ்தீனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “பாலஸ்தீனப்பகுதியில் தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கும் பணி யில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகள் என்ற கோட் பாட்டை இது மீறுவதாக உள்ளது. கிழக்கு ஜெருசலேம் பகுதியில் புதி தாக உருவாக்கத் திட்டமிட்டுள்ள 450 குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஜெருச லேமை வளைத்துக் கொள்வ தற்கான முயற்சியாகவே இது இருக்கிறது என்றும் குற்றம் சாட்டி யுள்ளனர்.
தற்போது இஸ்ரேலிய நிர்வாகம் உருவாக்கியுள்ள புதிய திட்டம், பாலஸ்தீன மக்கள் குடியிருக்கும் பகுதிகளை பிரித்து, தொடர்பு இல்லாத வகையில் செய்வதாக அமைந்திருக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத நிர்வாக அதிகாரிகள் இத்தகைய குடியிருப்புகள் அமைப் பதை மறுத்தாலும், இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் விரி வான செய்தியை வெளியிட்டி ருக்கிறது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள உம் லிசான் மற்றும் ஜபால் முக்கா பெர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று இந்த குடியிருப்புகளை அமைக்கப் போகிறது. இந்த நிறுவனத்தின் உரி மையாளர் வலதுசாரி இயக்கத்தின் முக்கிய நிர்வாகியாகவும் இருக்கி றார். இந்த ஆக்கிரமிப்புக் குடி யிருப்புகளை உருவாக்குபவர்களில் பலரும் வலதுசாரி இயக்கங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாக இருக்கிறார்கள். இது குறித்துக் கருத்து தெரிவித்த பாலஸ்தீன வெளியுறவுத்துறை அதிகாரிகள், “பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துத் தங்கள் விரிவாக்க நலனை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தியுள்ளார்கள். மேலும் ஒட்டுமொத்த ஜெருச லேமைக் கைப்பற்றும் திட்டத்தையும் அரங்கேற்றுகிறார்கள். இரு நாடுகள் கோட்பாட்டின்படி, கிழக்கு ஜெருசலேம்தான் இறையாண்மை கொண்ட பாலஸ்தீனத்தின் தலை நகராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதுவரையில் 2023 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 206 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று பாலஸ்தீன புள்ளிவிபர மையம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. மிகவும் கொடுமையான தாக்குதல்களை மேற்குக் கரைப் பகுதியில் உள்ள ஜெனின் நகரம்தான் எதிர்கொள்கிறது. இந்த நகரில் மட்டும் 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.
அண்மைக்காலத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜெனின் நகரத்தில் கடந்த வாரம் தாக்குதல்கள் நடந்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். எந்த அளவுக்கு தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதோ, அதே அளவுக்கு எதிர்ப்பு களும் அதிகரித்துள்ளன. இதனால்தான் குவிக்கப்படும் படைகளின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.