world

img

தொழிலாளர் நலனுக்காய் தோழராய் இணைந்தோம்! - கொரியாவின் தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன்

இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு (SIWU), தனது ஆதரவை தெரிவித்து கொரியாவின் தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் (NSEU) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் தலைவர் சான், உ-மாக் (Son, Woo-mok) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
"தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன், போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (SIWU) தன் ஆழமான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில் சென்னைக்கு அருகே உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலைநிறுத்தமானது, சங்கத்தை அங்கீகரிப்பது, சம்பள உயர்வு, வேலை நேரத்தில் முன்னேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுகிறது. இது ஒவ்வொரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். உங்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்றது என்று கேள்விபட்டோம். அதே தினத்தில் தான் எங்கள் சங்கத்தின் முதல் பொதுவேலைநிறுத்தம் கொரியாவில் தொடங்கியது. உங்கள் சங்கம் தொடங்கிய அன்றே எங்களுக்கு ஆதரவாக நீங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். உங்கள் சங்கத்தின் பொதுக்குழுவும், எங்கள் சங்கத்தின் முதல் பொதுவேலைநிறுத்தமும் ஒரே தினத்தில் தொடங்கியிருப்பது தற்செயல் ஆனதல்ல, நாம் வெவ்வேறு நாடுகளில் இருக்கிறோம். வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம். நமது ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாம் உறுதிபூண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் தோழர்களாக இணைந்திருக்கிறோம். ஒரு சர்வதேச நிறுவனம் என்கிற முறையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எங்கு செயல்பட்டாலும் தொழியாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பை அது மதித்து நடக்க வேண்டும். ஆனால், மிகவும் வருந்தத்தக்க வகையில் இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை. நியாயமான வேலை நிலைமைகள் இல்லை. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கமும், சிஐடியுவும் தலைமை தாங்கி நடத்துகிற இந்த வேலைநிறுத்தம் இந்திய தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்படியான போராட்டம் ஆகும். சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த பிரச்சனையை நேர்மையாகவும், விரைவாகவும் தீர்த்து வைக்க வேண்டுமென்று கோருகிறோம். தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சங்கம் இல்லா கொள்கையை எதிர்க்கிறோம். இதே கொள்கையை இந்தியாவிலும் அந்த நிறுவனம் பின்பற்றுவதை கவலையோடு பார்க்கிறோம். சங்கம் இல்லா நிறுவனம் என்கிற நிர்வாக கொள்கை தொழிலாளர் விரோத கொள்கையாகும். அது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. அது கொரியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்த கொள்கை தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகிறது. கார்ப்பரேட் லாபத்திற்காக தொழிலாளர்களின் குரல்களை புறக்கணிக்கிறது. இது காலவதியாகிப்போன நிர்வாக அணுகுமுறையாகும். தொழிலாளிகளின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தாத நிறுவனம் வளராது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் அதன் கம்பெனிகளில் இந்த செவிமடுப்பு இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சியின் பொருட்டு பரஸ்பரம் வளமாக இருப்பதற்கான வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழியமைக்க வேண்டும் என்று நம்புகிறோம். சென்னை, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க தலைமையிலான தொழிலாளர்களின் தைரியமான முடிவிற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் மிக விரைவாக ஏற்கப்படும் என்று நம்புகிறோம். தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும்போது அவர்களுக்கு எங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிப்போம். அவர்களுக்காக நாங்களும் இணைந்து குரல் கொடுப்போம். சிஐடியு மற்றும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.