காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக காசா மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
காசா மருத்துவத் துறை அலுவலகம் ஞாயிறன்று(நவ.24) வெளியிட்ட அறிக்கையில்,
மருத்துவப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. 310 க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும், பலர் சித்ரவதை மற்றும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
கடந்த அக்.7 ஆம் தேதிக்கு பிறகு 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக மருத்துவத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், இஸ்ரேல் ராணுவத்தினரின் பிடியில் இருந்த மருத்துவர் அதான் அல் புர்ஷ் சிறைக்கு அனுப்பட்டப்பட்ட பிறகு சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. காசாவில் சிறைபிடித்த பல மருத்துவர்களை இஸ்ரேல் சிறையில் அடைத்து துன்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அறிக்கையில், இஸ்ரேல் காசா மீதி விதித்துள்ள தடையால் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் நுழைவது தடுக்கப்படுவதால் சுகாதார நெருக்கடி மேலும் மோசமாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு காசாவில் நிலைமையை குறிப்பிட்டு, தொடர்ந்து குண்டுவீச்சுகள், விமானத் தாக்குதல்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது நேரடி தாக்குதல்களுக்கு உள்ளான கமால் அத்வான் மருத்துவமனையின் நிலைமையைச் சுட்டிக்காட்டியது.
இஸ்ரேலில் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தில் இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகளே. மேலும், காசாவில் நடக்கும் போர் குறித்த செய்தி சேகரிக்க சென்ற 188 செய்தியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து காசாவில் அகதிகள் முகாம், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.