இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று இந்திய நேரப்படி 2.45 மணியளவில் அமலுக்கு வந்தது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ளதால், தொடர்ந்து இஸ்ரேலுக்கும் , பால்ஸ்தீனத்திற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை ஒரு காரணமாக வைத்து இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது கொடூர தாக்குதலை நடத்த தொடங்கியது.
15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 70 % பெண்களும், குழந்தைகளும். எனினும் லான்செட் எனும் இதழ் 41% கூடுதலாக மரணம் நிகழ்ந்துள்ளது என மதிப்பிடுகிறது.
ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் போரை நிறுத்த, அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், பிணைக் கைதிகள் குறித்த விவரங்களை வெளியிடாவிட்டால், போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே, பிணைக் கைதிகளின் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் வழங்கியது. இதனையடுத்து, இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக முன்னதாக இன்று காலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிந்தவுடம் போரை மீண்டும் தொடங்க வேண்டும் என இஸ்ரேலிய வலதுசாரிகள் கோருகின்றன. இதனை பெரும்பான்மையான இஸ்ரேலிய சமூகம் அங்கீகரிக்கிறது. இன்று போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் டிரம்ப் பின்னர் என்ன நிலைபாடு எடுப்பார் என்பது எவரும் கணிக்க இயலாது. லெபனானில் போர் நிறுத்தத்துக்கு பின்னர் குறைந்தபட்சம் 100 முறை இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. காசாவிலும் இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்த ஒப்பந்தத்துக்கு அப்பால் சுதந்திர பாலஸ்தீனம் எனும் அடிப்படை கோரிக்கை உள்ளது. உலக தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக தலையிடாமல் அல்லது குறைந்தபட்சம் இஸ்லாமிய தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக களத்துக்கு வராமல் சுதந்திர பாலஸ்தீனம் ஏற்படப்போவது இல்லை. சுதந்திர பாலஸ்தீனம் இல்லாமல் இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை.