பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. கடுமையான கடன் சுமையில் சிக்கி ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காசின் கான் நிராகரித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டிலிருந்தபடி உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்தார். இம்ரான் கானின் இந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் விடுதலை பெற்றதிலிருந்து இதுவரையில் ஒரு பிரதமர் கூட தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.