நைரோபி, செப். 11 - இந்தியாவின் முக்கியமான துறைகள் அனைத்தையும் கைப்பற் றிய தொழிலதிபர் அதானி, தற் போது பிரதமர் மோடியின் ஆத ரவுடன், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் என புறப்பட்டு, தற்போது ஆப்பிரிக்க நாடுகளின் வளங்களையும் சூறையாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
அந்த வகையில், கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தையும்- அந்நாட்டு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி ரூ. 15 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இங்கு புதிய ஓடுபாதை, புதிய முனை யத்தை கட்டி, புதுப்பித்து- பராமரிக்கும் பணிகளை 30 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள உள்ளது. அதற்கான கட்டணத்தையும் வசூலிக்க உள்ளது.
ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்த ஒப்பந்தத்திற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடைபெறாமல் கென்யா அரசு பார்த்துக் கொண்டது. இந்நிலை யில் தான், கென்ய ஆட்சியாளர்களை நம்பாத ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி யுள்ளனர். ஒப்பந்தத்தை ரத்து செய்யப்படாவிட்டால், வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று விமான நிலைய ஊழியர்கள் முன்பே எச்சரித் திருந்தனர் என்றாலும், தற்போது திடீ ரென வேலைநிறுத்தத்தில் இறங்கி யுள்ளனர். ‘அதானியே வெளியேறு’ என்று முழக்கங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையம் ஸ்தம்பித்தது
“தனியார் நிறுவனத்திற்கு விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவதன் மூலம், இங்கு ஆட்குறைப்பு நடக்கும்; ஊழியர்களின் வேலை பறிபோகும்; எங்களின் தொழிற்சங்க உரிமைகளும் பறிக்கப்படும். எனவே, இந்த ஒப்பந்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்று விமான நிலைய ஊழியர் சங்கத்தினர் கூறி யுள்ளனர்.
போராட்டம் காரணமாக நைரோபிக்கு வரும் விமானங்கள் சில திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. அதே போல, இங்கிருந்து புறப்படும் சில விமானங்கள் ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. சில தாமதமாக புறப்பட்டு சென்றிருக்கின்றன.
விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவது, அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கென்யா மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை, விமான நிலைய ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது.