world

img

ஆய்வுப்பணிகளை முடக்குவதா? தொழிற்சங்கங்கள் கவலை

பகுதி நேர ஆய்வாளர்களை வெளியேற்றும் முடிவை ஜப்பானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் 600 பகுதிநேர ஆய்வாளர்களைப் பணியிலிருந்து நிறுத்தப் போவதாக ஜப்பானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முடிவெடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் ரிக்கென் என்று சொல்லப்படும் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
இந்த முடிவை துறை அதிகாரிகள் அறிவித்த அன்றே, அந்த ஆய்வு மையத்தின் தொழிற்சங்கம் செய்தியாளர்களைச் ச்ந்தித்தது. இந்த 600 பேருக்கும் வெளிப்படையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியான விதியிலிருந்து தப்பிக்கவே அவர்களின் பணியை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார்கள் என்ற தொழிற்சங்கம் அம்பலப்படுத்தியது. இந்தப் பணி நீக்கத்தால் சுமார் 60 ஆய்வுக்குழுக்கள் கலைக்கப்படும் என்ற அச்சத்தையும் தொழிற்சங்கம் வெளிப்படுத்தியது.
கடுமையான அதிருப்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்த தொழிற்சங்கத் தலைவரான கனாய் யாசுயுகி, "பணி நீக்கம் செய்யப்படுபவர்கள் மொத்தமுள்ள ஆய்வாளர்களில் எட்டில் ஒரு பங்கினராவர். பகுதி நேர ஆய்வாளர்களில் பலர் குழுத்தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் பணி நியமனத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.
தற்போதைய நிகழ்வுகள் குறித்துப் பேசிய ஆய்வுக்குழு ஒன்றின் தலைவர் "தற்போது உருவாக்கப்பட்டுள்ள சிறந்த ஆய்வுச்சூழலுக்காக  நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் உழைத்திருக்கிறோம். சில ஆய்வுகளை தற்போதுதான் நிறைவு செய்யத் தொடங்கியுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான அரசு நிதியுதவியையும் பெற்றிருக்கிறோம். ஆனால், பணி நீக்கத்தால் அந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமல் போய்விடும்" என்றார்.