world

img

ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கூட்டறிக்கை

ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கூட்டறிக்கை

டெஹ்ரான், ஜன. 29- ஈரான் மீது போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டைக் கண்டித்து உலகம் முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையில் அமைதி, இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகப் போராடும் ஈரான் நாட்டு மக்களுக்கு தங்களது ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் டிசம்பர் 28 அன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தொடங்கியப் போராட்டங்கள் குறித்து ஈரான் கம்யூனிஸ்ட் கட்சியான ‘டூடே கட்சி’ (Tudeh Party of Iran) அளித்த அறிக்கையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:  ஈரான் தேசிய நாணயத்தின் கடும் வீழ்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரச் சீர்குலைவு ஆகியவற்றிற்கு எதிராக தலைநகர் டெஹ்ரானில் உள்ள சந்தையிலிருந்து இப்போராட்டங்கள் முதலில் வெடித்தன. இந்தப்  போராட்ட இயக்கம் மிக வேகமாக மற்ற நகரங்களுக்கும்பரவியது.  இப்போராட்டமானது ஈரானில் அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ள  ஊழல், கோடிக்கணக்கான மக்களை வறுமைக்குத் தள்ளிய பல ஆண்டுகால நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள், ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவது மற்றும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நீண்டகால ஏகாதிபத்தியத் தடைகளின் பாதிப்பு ஆகியவற்றிற்கு எதிரான மக்களின் கோபத்தைப் பிரதிபலிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் காவல்துறை அதிகாரிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள கொடூரமான ஒடுக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்துள்ளது. அதேபோல ஜனவரி 8 முதல் ஈரானின் பல நகரங்களில் நடந்து வரும் படுகொலைகள் மற்றும் வன்முறைகள் குறித்தான தங்களின் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளன.  இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதனையும், பாதுகாப்புப் படையினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதை ஈரான் மதத் தலைவர் அலி காமேனி ஒப்புக்கொண்டதையும் அந்த அறிக்கையில் இடதுசாரிக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், அரசாங்கம் நடத்திய ஒடுக்குமுறையின் அளவை மறைக்கவும், வன்முறை மற்றும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை உலகுக்குத் தெரியாமல் தடுக்கவும், அந்நாட்டு அரசு இணையச் சேவையை முழுமையாக முடக்கியுள்ளது எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் ஈரான் அரசு மீதான விமர்சனத்தை முன்வைத்துள்ள அதே வேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசும் ஈரான்  மக்களின் போராட்டங்களை தங்களது சொந்த தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயல்வதையும் அவ்வறிக்கையில் சரியாக சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளன.  அமைதியான மக்கள் போராட்டங்களை வன்முறையை நோக்கித் திசைதிருப்பவும், ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான காரணத்தை உருவாக்கவும், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவும் இந்த ஏகாதிபத்திய நாடுகள்  திட்டமிட்டுச் செயல்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், ஈரான் மக்களின் போராட்டத்தின் உண்மையான காரணங்களிலிருந்து திசைதிருப்பவும், மீண்டும் மன்னராட்சியை கொண்டு வரும் முயற்சியையும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்  ஊடகங்கள் வெளியிட்டு வரும் ஆதாரமற்ற  கதைகளையும் அவ்வறிக்கையின் வாயிலாக நிராகரித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது புதிய ஏகாதிபத்திய ராணுவத் தாக்குதலை நடத்துவோம் என விடுத்துள்ள மிரட்டல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அந்த நாட்டு மக்களுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் பெரும் பேரழிவையே ஏற்படுத்தும். ஈரானின் எதிர்காலமானது ஏகாதிபத்தியத் தலையீடு மற்றும் வெளிநாடுகளின் அழுத்தங்கள் இன்றி, அந்த நாட்டு மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மிகக் கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளன.   மேலும் ஈரான் மக்கள், ஈரானின் டூடே கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் அந்நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரி, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு தங்களின் முழுமையான ஒற்றுமையையும் சர்வதேச ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளன. இக்கூட்டறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.