கிளாரா ஜெட்கின் 1857ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் நாள் பிறந்தார். இவர்ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவவாதி. பெண்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடிய செயற்பாட்டாளர். 1911ல் சர்வதேச பெண்கள் தினத்திற்கு பெண்களைத் திரட்டினார். 1917 ஆம் ஆண்டு வரை ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர். பின்னர் ஜெர்மனி சுதந்திர சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினராகவும், ஸ்பார்ட்டாசிஸ் லீக்கின் உறுப்பினராகவும் இருந்தார். ஸ்பார்ட்டாசிஸ் லீக் பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஆக மாறியது.கிளாரா ஜெட்கின் ஜெர்மனி நாட்டின் சாக்சோனியில் கிளாரா எய்சனர் என்ற விவசாயகிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை காட்பிரைடு எய்சனர் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது தாயார், ஜோசபின் விட்டேல் எய்சனர். மிகவும் படித்த நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கிளாரா ஜெட்கினின் கணவர் பெயர் ஓசிப் ஜெட்கின்.
1874 இல் ஜெர்மனியில் படிப்பை முடித்து ஆசிரியராக இருந்தபோது பெண்கள் இயக்கம் மற்றும் தொழிலாளர் இயக்கங்களிலும் தொடர்பை வளர்த்துக் கொண்டார். பெர்டினன்டுலஸ்சாலேயால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து ஜெர்மன் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆகஸ்டு பெபெல் மற்றும் வில்கெல்ம் லீப்நெக்ட் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயகதொழிலாளர் கட்சி ஆகிய இரண்டும் இணைத்து ஒரு கட்சியாக ஜெர்மன் சோசலிசத் தொழிலாளர்கட்சியாக உருவாக்கப்பட்டது. இந்த ஜெர்மன் சோசலிசத் தொழிலாளர் கட்சியில் 1878ல் கிளாரா ஜெட்கின் சேர்ந்தார். 1890ல் ஜெர்மன்சமூக ஜனநாயக கட்சி என பெயர் மாற்றப்பட்டது.கிளார்க் ஜெட்கின் ரோசா லக்சம்பர்க்கின் நெருங்கிய தோழி ஆவார். பெண்களுக்கான சம உரிமைகளுக்காக கிளாரா ஜெட்கின் போராடுவதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். 1907 ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்குக் கிளாரா ஜெட்கின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1907ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முதலில் சர்வதேச மகளிர் தினத்தை 1910ஆம் ஆண்டு மார்ச் 8ல் அனுசரிக்க முயற்சி எடுத்தார். இது கோபன்கேகனில் நடைபெற்ற பெண்களுக்கான மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டது. 1915ல் பெர்லினில் சர்வதேச சோசலிச பெண்கள் அமைப்பின் போர் எதிர்ப்பு மாநாட்டைஏற்பாடுகளைச் செய்தார்.ஜெர்மனி புரட்சிக்குப் பின் 1919 ஜனவரியில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. கிளாரா ஜெட்கினும் 1920 முதல் 1933 வரை அதில் தன்னை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டார். 1920ல் கிளாரா பெண்களைப் பற்றிலெனினிடம் நேர்காணல் ஒன்றை நடத்தினார். 1924 வரை ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். 1927 முதல் 1929 வரை அதன் மத்தியக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும் அவர் 1921 முதல் 1933 வரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.1933 இல் இட்லர் ஆட்சிக்கு வந்த பின் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கிளாரா சோவியத் யூனியனுக்குச் சென்றார். 1933 இல் கிளாரா ஜெட்கின் மாஸ்கோவிற்கு அருகில் தனது 76 ஆவது வயதில் இறந்தார்.
- பெரணமல்லூர் சேகரன்