1856 ஆம் ஆண்டு ஜூலை 26ல் பிறந்த ஜார்ஜ் பெர்னாட் ஷா ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது படைப்புகள் ஆகும். மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றையும் எழுதினார். அவரது பிரதான கவனம் நாடகமே ஆகும். அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
பெர்னாட் ஷா உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை உணர்ந்து மிகுந்த கோபம் கொண்டார். மேலும்அவரது பெரும்பாலான படைப்புகள் அந்த சுரண்டலைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்தன. ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அதனால் ஆணுக்குசமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார். பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே.
பெரணமல்லூர் சேகரன்