உலக நாடுகள் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் உலக நாடுகளிடையே நிலவிவரும் நிலையில், மூன்றாம் அலையின் தொடக்கக் காலத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் தெரிவித்து உள்ளதாவது. மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் முறையான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்ததாலும் டெல்டா வகை கொரோனா தீவிரமாக பரவிவருகிறது. நாம் மூன்றாம் அலையின் தொடக்கக் காலத்தில் உள்ளோம்.
டெல்டா வகை கொரோனா 111 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. இப்போது இல்லையென்றாலும், அதிகம் பரவக்கூடிய கொரோனாவாக அது மாறும் என எதிர்பார்க்கிறோம். சமீப காலமாக, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவு கொரோனா பரவலும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்தது என்றார்.
கோவிட் தொற்று பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் 2ஆம் அலையின் வேகம் சற்றே தணிந்துள்ளது நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கை குறிப்பிடத்தக்கது.