ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை
ரோஸ்நெஃப்ட், லூகோயில் ஆகிய இரு பெரிய ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்யா மீது மேலும் அதிக அழுத்தம் கொடுக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க கருவூலத் துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் அதிக தடை நடவடிக்கைக ளை விதிக்க உள்ளதாகவும் இத்தடைகளில் தனது நட்பு நாடுகளும் இணைய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது புதிய தடை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது 19 ஆவது தொகுப்பு தடைகள் ஆகும். இதன்படி ரஷ்யாவிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் குறைந்த விலை எரிவாயுவை சார்ந்துள்ளன. ஆனால் உக்ரைன்- ரஷ்ய போர் துவங்கிய பிறகு அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு மாற்றாக அமெரிக்காவிடம் அதிக விலைக்கு எரிபொருள் வாங்குகின்றன.
வடக்கு காசாவிற்கு உதவி வழங்குவதில் சவால் - ஐ.நா.
இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகி 10 நாட்களுக்கு மேலாகியும் காசாவின் வடக்கு பகுதிக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவது சவாலாகவே உள்ளது. மேலும் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும் பொருட்களும் போதுமான அளவில் இல்லை என ஐ.நா மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு காசாவுக்கு செல்லும் ஜிகீம், எரெஸ் எல்லைப் பாதைகள் இஸ்ரேல் ராணுவத்தின் ஆதிக்கத்தின் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு குழந்தைகளின் தாய்க்கு வீடு வழங்கும் வியட்நாம்
வியட்நாமில் புதிய மக்கள் தொகைச் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. பாலின விகிதத்தில் உள்ள அதிக ஏற்றத்தாழ்வை கையாள்வது மற்றும் மக்கள் தொகையை அதிகரிப்பது ஆகியவற்றிற்கு அச்சட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி 35 வயதுக்குள் இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு நிதி உதவி மற்றும் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு (சமூக) வீடுகளை கொடுப்பது உள்ளிட்ட சலுகைகளும் இச்சட்டத்தில் உள்ளன.
மங்கோலியாவில் தட்டம்மை 13,500 ஐ கடந்த பாதிப்பு
மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாக தட்டம்மை பரவல் தீவிரமடைந்துள்ளது. 13,532 நபர்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13,514 பேர் குணமாகியுள்ளனர். தட்டம்மை பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களையே அதிகம் பாதிக்கும். சர்வதேச அளவில் கடந்த 2023 இல் மட்டும் 1,07,500-க்கும் அதிகமானோர் தட்டம்மை பாதிப்பினால் பலியானது குறிப்பிடத்தக்கது.