மக்களின் கோபத்தை தற்காலிகமாக தணிக்க மாட்டிறைச்சி, காபி மீதான வரிகளை நீக்கும் டிரம்ப்
வாஷிங்டன், நவ.15- உலக நாடுகளின் மீது வரிகள் விதித்து வர்த்தகப்போர் நடத்தி வரு கிறது அமெரிக்கா. இதனால் அந்நாட்டில் இறக்குமதியாகும் சில முக்கியமான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அதிக விலை யேற்றம் கண்டுள்ளது. ஏற்கெனவே பணவீக்கம், வேலை யின்மை, உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் அமெரிக்க மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கி யுள்ளனர். இந்நிலையில் தற்போது மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெ ழுத்திட்டுள்ளார். டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பிருந்தே பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்தது. எனினும் டிரம்ப் பதவியேற்புக்கு பின் அதனை சரி செய்வதற்காக அவர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நடந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோரான் மம்தானி பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தும், அதனை எதிர்கொள்வதற்கான சில திட்டங்க ளையும் முன்வைத்து பிரச்சாரம் செய்துவந்தார். இந்த பிரச்சாரம் மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுத்தது. அவரும் தேர்தலில் வெற்றி பெற்றார். இது டிரம்ப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தன்னை சோசலிஸ்டாக அறி வித்துக்கொண்ட மம்தானியின் வெற்றி அமெரிக்க அரசியலில் புது அலையை உருவாக்கியது. இந்த சூழல் முதலாளித்துவ மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் பக்கம் இருந்து மக்களின் அடிப்படைப் பிரச்சனை களை சரி செய்ய கவனம் செலுத்தும் சமூக ஜனநாயகவாதிகளின் பக்கம் மக்களை திருப்பிவிடும் நகர்வாக பார்க்கப்படுகிறது. இதனை தடுப்ப தற்காகவும் மக்களின் கோபத்தை தற்காலிகமாக தணிக்கவும் டிரம்ப் சில பொருட்களுக்கான வரிகளை குறைக்கத் துவங்கியுள்ளார். அதன்படி தேநீர், பழச்சாறு, கோகோ, மசாலாப் பொருட்கள், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் மீதான வரிக ளையும் நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதில் உள்ள சில பொருட்கள் அமெ ரிக்காவில் உற்பத்தி செய்யப் படுவதில்லை. ஈக்வடார், குவாதமாலா, எல் சால்வடார், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா சில ஒப்பந்தங்களை எட்டியுள்ளதாக அறிவித்த பிறகு டிரம்ப் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அமெரிக்காவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடான பிரேசிலின் மீது டிரம்ப் வரிகளை விதித்ததே மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்குக் காரணமாகக் கருதப் படுகிறது.
