ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ரஷ்ய ஜனாதிபதி புடினை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் ரஷ்யா சென்ற போது இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து புடினிடம் பேசியுள்ள தாகவும் பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் குறித்தும் அவருடன் விவாதித்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க- இந்திய பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்
அமெரிக்கா-இந்தியாவிற்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய பொருளாதாரக் கவுன்சில் இயக்குநரான கெவின் ஹாசெட், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும். இதுதொடர்பாக நான் இந்திய தூதரிடம் பேசினேன் எனக் கூறியுள்ளார். ரஷ்யாவிடம்இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்ததால் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது எனக் கூறப்படுகிறது.
பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஜப்பான் தகுதியற்றது : சீனா
பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தம் குறித்தான வருடாந்திர விவாதத்தில் பேசிய ஐ.நா அவைக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங், ஜப்பான் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றது என கடுமையாக விமர்சித்துள்ளார். சீனாவின் உள்நாட்டு அரசியலில் தலையிடும் வகையில் தைவான் குறித்து பேசிய ஜப்பான் பிரதமர் டகைச்சியின் கருத்துக்கள் தவறானவை மற்றும் ஆபத்தானவை. அவரது பேச்சு ஒரே -சீனக் கொள்கையையும் சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான உணர்வையும் மிக மோசமாக மீறுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
கூகுள் ‘ஜெமினி 3’ புதிய மாடல்
கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு மாடலான ஜெமினி-யின் புதிய மேம்பட்ட வடிவ மான ஜெமினி-3 ஐ வெளியிட்டுள்ளது. இம்மாடல், பன்முகப் புரிதலுக்கான மிகச் சிறந்த மாதிரி என்றும், இது வரை உருவாக்கப்பட்டதில் மிகச் சக்திவாய்ந்த தானாகவே பணிகளைச் செய்து முடிக்கும் திறன் (ஏஜெண்டிக்) மற்றும் சாதாரண மொழியில் கூறும் யோசனையை புரிந்துகொண்டு, அதற்கேற்ற கோட் எழு தும் திறனான “வைப் கோடிங்” மாதிரி என்றும் அறிவித்துள்ளது. ஜெமினி 3 மிகவும் புத்திசாலித்தனமான மாடல், ஜெமினியின் அனைத்துத் திறன்களையும் ஒன்றிணைத்து உதவும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
உலகம் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்டு வருகிறது
உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் 2025: அறிக்கையின் சுருக்கத்தை ஐ.நா அவை வெளியிட்டது. அதில் உலகம் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையான 250 கோடியில் வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே நகரங்களில் வசித்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 45 சதவீதமாக உயர்ந்து, இரண்டு மடங்கிற்கும் அதிகமாகி உள்ளது. பெருநகரங்களின் எண்ணிக்கை 1975 ஆம் ஆண்டில் எட்டாக இருந்தது. 2025 ஆம் ஆண்டில் நான்கு மடங்காக ( 33 )அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
