சொத்துக்களை கைப்பற்றினால் பதிலடி : ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைன்-ரஷ்ய போர் துவங்கிய பிறகு ரஷ்யாவின் பல கோடி மதிப்புடைய சொத்துக்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முடக்கி வைத்துள்ளன. இந்த சொத்துக்களை திருடுவதற்காக ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க அப்பணத்தை பயன்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய சொத்துக்களைக் கைப்பற்றினால், அதற்குப் பதிலடி கொடுக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜஹரோவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவுக்கான புதிய திட்டம் : டிசம்பர் இறுதிக்குள் அறிவிப்பு?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், காசாவுக்கான புதிய நிர்வாக அமைப்பை அறிவிக்கத் தயாராகி வருவதாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தில் காசாவை நிர்வகிக்க டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டப்படி இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிகளுக்குள் சர்வதேசப் படை (ISF) அனுப்பப்படும். எனினும் காசாவை தனது ரியல் எஸ்டேட் தொழிலுக்காக டிரம்ப் பயன்படுத்தவும் கூடும்.
சீனா சென்ற மக்ரோன் : போர் குறித்து பேச்சுவார்த்தை
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அரசு முறைப்பயணமாக சீனா சென்றிருந்தார். இந்த பயணத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் உக்ரைன் போர் மற்றும் வர்த்தகம் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர விடாமல் ஐரோப்பிய நாடுகள் முரண்பட்டுக்கொண்டுள்ள நிலையில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்கு மக்ரோன் சென்றுள்ளது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
பாக்.தலைமைத் தளபதியாக அசிம் முனீர் நியமனம்
பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட 27 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், முப்படைகளின் ஒருங்கிணைப்புத் தலைவராக இருந்த பதவி ரத்து செய்யப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அந்நாட்டின் ராணுவம் மேலும் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை வெள்ளம் : 486 பேர் பலி
இலங்கையில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி முதல் பெய்த கனமழை வெள்ளம் மற்றும் ‘டிட்வா’ புயல் காரணமாக இதுவரை 486 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 341 பேர் காணா மல் போயுள்ளனர். இந்த சேதத்தில் சுமார் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.88 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு உள் கட்டமைப்புகள் சிதைந்ததால், இலங்கைக்குச் சுமார் 700 கோடி டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
