நியூயார்க்: 15,000 செவிலியர்கள் வேலைநிறுத்தம் நியூயார்க் மாநகரில், தனியார் துறையைச் சேர்ந்த 15,000 செவிலியர்கள், பணியிட பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு கோரி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைத் தலைவர்கள் பல கோடி டாலர்களை வருமானமாகப் பெறும் நிலையில், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. நியூயார்க் நகரின் புதிய மேயர் ஜோஹ்ரான் மம்தானி, போராட்டக் களத்திற்கே வந்து செவிலியர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி : ரோசா லக்சம்பர்க் நினைவு மாநாடு பெர்லின் மாநகரில் ஜனவரி 10-ல் 31-வது ரோசா லக்சம்பர்க் நினைவு மாநாடு நடை பெற்றது. ஜெர்மனி அரசின் தீவிர ராணுவ மயமாக்கல் மற்றும் ஆயுதப் பெருக்கத்தைக் கண்டித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி கட்சியினர் இதில் பங்கேற்றனர். கட்டாய ராணுவ சேவையை எதிர்த்தும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும் மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது.
பொலிவியா: தொழிலாளர் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி! பொலிவியாவின் வலதுசாரி அரசு, பன்னாட்டு நிதி நிறுவனத்தின் நிர்பந்தத்தால் எரிபொருள் மானியத்தை நீக்கி, விலையை 162% உயர்த்தியது. இதை எதிர்த்துத் தொழிலாளர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால், அரசு தனது முடிவை வாபஸ் பெற்றுள்ளது. சமூக அமைப்புகளைக் கலந்தாலோசிக்காமல் இனி சட்டங்களை நிறைவேற்ற மாட்டோம் என அரசு உறுதியளித்துள்ளது. இது உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
பிரிட்டன்: பாலஸ்தீன ஆதரவு உண்ணாவிரதப் போராட்டம் பிரிட்டன் சிறைகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பிரிட்டன் உடந்தையாக இருக்கக் கூடாது என வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் மூவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுக் கின்றன.
பாகிஸ்தான்: 2 மாத சிறைவாசத்திற்குப் பிறகு இடதுசாரி தலைவர் விடுதலை! பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில், அரசு மற்றும் நிலப்பிரபுக்களின் கூட்டணியால் விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராகப் போராடி வரும் மஸ்தூர் கிசான் கட்சி (MKM) தொண்டர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள். பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்ட அக்கட்சியின் தலைவர் சலர் ஃபையாஸ் அலி, இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கைதான மோமின் கான் மற்றும் ஷெர் முகமது ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எத்தகைய அடக்குமுறையும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதைத் தடுக்க முடியாது என மஸ்தூர் கிசான் கட்சி அறிவித்துள்ளது.
