பாஜக அரசு தனது விளம்பரத்திற்காக ஒதுக்கிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே புதிய எல்.பி.ஜி (LPG) சேமிப்பு வசதிக்கு ஒதுக்கியுள்ளது; இது நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என்று மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவின் ஒரு மாத எல்.பி.ஜி தேவை 30 லட்சம் டன். நெருக்கடிக்காலத் தேவைக்காக நிலத்தடி குகைகளில் இருப்பு வைக்கும் வசதி (Strategic Reserve) வெறும் 1.40 லட்சம் டன் மட்டுமே. அதாவது விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டால், நம்மிடம் உள்ள இருப்பு வெறும் 1.5 முதல் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது.
இதற்குக் காரணம், எதிர்காலப் பாதுகாப்பிற்காகச் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதில் அரசாங்கம் காட்டிய அலட்சியமே. 2025-26 பட்ஜெட்டில் சேமிப்பு வசதிகளுக்காக முதலில் ரூ.5,876 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த நிதி அதிரடியாகக் குறைக்கப்பட்டு, வெறும் ரூ.870 கோடியாக (80% குறைவு) வெட்டிச் சுருக்கப்பட்டது.
இந்த ஆண்டு 2026-27 பட்ஜெட்டில், புதிய கொள்முதலுக்காக வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெயரளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாடு இந்தியாவை விடவும் அதிக இறக்குமதிச் சார்பு (95%) கொண்டது. ஆனால் அதன் முன்னேற்பாடு வியக்க வைக்கிறது. ஜப்பான் தன்னிடம் 254 நாட்களுக்குத் தேவையான அவசரகால இருப்பைப் பராமரிக்கிறது. தற்போதைய உலகளாவிய நெருக்கடியின் போது, ஜப்பான் எந்தப் பதற்றமும் நெருக்கடியும் இன்றிப் பிரச்சினையை எதிர்கொள்கிறது. ஆனால் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைத்துள்ள இந்தியா, பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறது.
33 கோடி குடும்பங்கள் எல்.பி.ஜி இணைப்பைச் சார்ந்துள்ள இந்தியாவில், ஆளும் பாஜக அரசு தனது விளம்பரத்திற்கு ஒதுக்கிய தொகையில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே புதிய சேமிப்பு வசதிக்கு ஒதுக்கியிருப்பது நாட்டிற்கு இழைத்துள்ள மாபெரும் அநீதி.
உக்ரைன் - ரஷ்யா போருக்குப் பின் உலகமே இந்த விஷயத்தில் விழித்துக்கொண்டது. ஐரோப்பிய நாடுகள் தனது எரிசக்தி தேவையில் 30 சதவீதத்தைச் சேமிப்பு வசதியாக உருவாக்கக் கட்டாயமாக்கின. ஆனால் அதிலிருந்து பாஜக அரசு எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) பலமுறை எச்சரித்த பிறகும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால்தான் இந்த பட்ஜெட்டில் பெயரளவுக்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் தேவையும் நலனும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, பாஜகவின் விளம்பர மோகமே முன்னுரிமை பெற்றது. அதனால்தான் 'உஜ்வாலா' விளம்பரம் மோடியின் படத்தோடு குக்கிராமம் வரை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தியாவின் அடுப்புகள் எரிய முடியாமல் தத்தளிக்கின்றன," இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
