உளவுத்துறைத் தலைவர் நீக்கம் : நேதன்யாகு
இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத்துறை அமைப்பான ‘ஷின் பெட்டின்’ தலைவர் ரோனென் பாரினை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பே ரோனென் மீது தான் நம்பிக்கையை இழந்து விட்டதாக நேதன்யாகு கூறியது குறிப்பிடத்தக்கது. நேதன்யாகுவிற்கு எதிரான போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் அவரது இந்த முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது
உக்ரைனுக்கு ராணுவம் அனுப்ப தீவிரம் காட்டும் இங்கிலாந்து
உக்ரைனுக்கு அமைதி படையை அனுப்பும் திட்டத்தை உறுதிசெய்ய ஐரோப்பா உள்ளிட்ட 30 நாடுகளின் ராணுவ தளபதிகள் இங்கிலாந்தில் கூடியுள்ளனர். போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா என்று தனக்குத் தெரியாது. ஆனால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” ஒரு ஆக்கப்பூர்வமான செயலை செய்யும் கட்டத்திற்கு சரியான திசையில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உதவியாளர் சீனா புதிய மைல்கல்
சீன செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான மனுஸ் தான் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு உதவி யாளரைப் பதிவு செய்தது. இது மீண்டும் அமெரிக்கா வை சார்ந்த நிறுவனங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் பல நிறுவனங்கள் சீனாவின் நிறுவனங்களை நோக்கி மிக வேகமாக நகரத்துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை புதிய கட்டத்துக்கு உந்தித்தள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் தாக்குதல் அதிகரிப்பு : இஸ்ரேல் ராணுவம் தகவல்
இஸ்ரேல் ராணுவம் தெற்கு காசாவில் தங்கள் தரை வழித்தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் ரஃபா நகரில் உள்ள ஷபுரா அகதிகள் முகாமை நோக்கி தங்கள் ராணுவம் செல்வதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதாகச் சொல்லி இஸ்ரேல் வெளிப்படை யாகவே பாலஸ்தீனர்களை படுகொலை செய்து வருகின்றது என கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
அர்ஜெண்டினா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
ஜனாதிபதி ஜேவியர் மிலெய் தலை மையிலான அர்ஜெண்டினா அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஏப்ரல் 10 அன்று பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவின் தொழிலாளர் பொது கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜேவியர் மிலெய் கொள்கைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளி வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு எதிராகவும் உள்ளது என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.