பூமியும், சிவப்பு கிரகமான செவ்வாயும் சூரியனின் எதிர் பக்கங்களில் இருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலத்திற்குக் கட்டளையிடுவதை நாசா நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
செவ்வாய் சூரிய இணைப்பு என்று அழைக்கப்படும் நிகழ்வு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்நிகழ்வு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் போது சூரியனிடமிருந்து சூடான, அயினியாக்கப்பட்ட வாயு வெளியேறுகிறது. இது விண்வெளிக்கு வெகுதூரம் நீண்டுள்ளதாகவும், செவ்வாய்-சூரிய இணைப்பின் போது பூமியும் செவ்வாயும் ஒன்றையொன்று பார்க்க முடியாது என்றும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், செவ்வாய்க் கிரகத்தில் உள்ள விண்கலத்துடன் விஞ்ஞானிகள் தொடர்பு கொள்ள முயன்றால், இந்த வாயு ரேடியோ சிக்னல்களில் குறுக்கிடலாம் என்றும், அது சிக்னலை சிதைத்து எதிர்பாராத விபரீதத்திற்கு வழிவகுக்கும் என்பதால் அடுத்த சில வாரங்களுக்கு நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலத்திற்குக் கட்டளையிடுவதை நிறுத்திவிடும் என்று தெரிவித்துள்ளது.