“அமெரிக்காவில் டிரம்ப் சிரித்தால்... எண்ணெய் இறக்குமதி மீது எதிரொலிக்கும்”
திருப்பரங்குன்றத்தில் மக்களைப் பிரிக்கும் அரசியலை பாஜக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், சர்வதேச அரங்கில் டிரம்ப் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர் சிரிக்கச் சிரிக்க மோடி ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிற கச்சா எண்ணெய் மதிப்பிலும், அளவிலும் எதிரொலி அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆகஸ்ட் 2025 இல் டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரியை விதித்து ரஷ்யா விடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கு வதை குறைத்துக் கொள்ள வேண்டு மென்று மிரட்டினார். அக்டோபர் 2025 இல் இந்தியாவின் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி 38 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 2024 இல் 5.8 பில்லியன் டாலர் பெறுமான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது எனில், இந்த அக்டோபரில் அது 3.55 பில்லியன் டாலர் ஆக குறைந்துள்ளது. அளவு என்று பார்த்தால் 103 லட்சம் டன்னில் இருந்து 71.6 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கடந்த அக்டோபரில்தான் அதிகமான இறக்குமதி பதிவாகி இருப்பதால் அதை அடிப்படை மாதமாகக் கொண்டு கணக்கிடும் போது இந்த அக்டோபரில் வீழ்ச்சி இருந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் கடந்த ஓராண்டில் 6 மாதங் களில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி வீழ்ச்சி 20 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கிறது. செப்டம்பரில் கூட 17 சதவீத வீழ்ச்சி இறக்குமதி மதிப்பில் இருந்துள்ளது. (ஆதாரம்: “தி இந்து” டிசம்பர் 5) ஒரு பக்கம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி வீழ்ச்சியை காணும் போது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பதே டிரம்ப் “சிரிப்பிற்கு” காரணம். உண்மையில் டிரம்ப் இறக்குமதி தண்ட வரி 25 சதவீதத்தை போடுவதற்கு முன்பே “குறிப்பறிந்து” இந்தியா, ரஷ்ய எண்ணெய்யை குறைக்கத் துவங்கி விட்டது. ஆனாலும் செப்டம்பரை விட அக்டோ பரில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி கூடி யுள்ளது. இது என்ன முரண் என்கிறீர்களா? டிரம்பின் தடைகள் நவம்பர் 21-இல் இருந்துதான் கூடுதலாக சில ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை இணைத்து கடுமையாகப்போகிறது. ஆகவே அதற்குள் வாங்கிக் கொள்ளலாமென்ற முனைப்பே காரணம். - க.சுவாமிநாதன்
