கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா அலை தீவிரமடைந்து தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஆஸ்துமா பிரச்சினைகளுக்காக மருத்துவமனை வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகள் அதே இடைவெளியுள்ள ஆறு மாதங்களில் ஆஸ்துமாவில் முன்னேற்றமடைவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கலிபோர்னியாவைச் சேர்ந்தவரும், குழந்தைகள் நல மருத்துவருமான கிறிஸ்டியன் செளவ், கொரோனா முதல் அலையின்போது அமெரிக்காவில் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7,700 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு சார்ந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடிந்தது.
ஆனால், தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு சார்ந்த பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கிறிஸ்டியன் செளவ் தெரிவித்துள்ளார்.