world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயற்சி : டிரம்ப்புக்கு ஐரோப்பா எதிர்ப்பு

டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். டிச 21 அன்று கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் , அதனைப் பெறுவதற்கான முயற்சியை லூசியானா மாகாண ஆளுநர் ஜெஃப் லேண்ட்ரி மேற்கொள்வார்” என்று அவரை கிரீன்லாந்துக்கான ‘சிறப்புத் தூதராக’ டிரம்ப் நியமித்தார். இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

லிபியா ராணுவத் தளபதி மரணம் : மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு  

துருக்கி தலைநகர் அங்காரா அருகே நடைபெற்ற விமான விபத்தில் லிபியாவின் ராணுவ தலைமைத் தளபதி முகமது அல்-ஹத்தாத் உட்பட 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து லிபியாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த லிபிய ராணுவ அதிகாரிகள், தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு லிபியாவுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது.

இந்திய வம்சாவளி பெண் மரணம் : காதலனுக்கு பிடி வாரண்ட்  

கனடாவில் மாயமான ஹிமான்ஷி குரானா (30) என்ற  இந்திய வம்சாவளிப் பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் , தலைமறைவான அவரது காதலன் அப்துல் கபூரியை கொலைக் குற்றவாளியாக அறிவித்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நாடு தழுவிய அளவில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்தியப் பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய உறவு மோசமடைவதை விரும்பவில்லை வங்கதேசம்

 வங்கதேசத்தில் நிலவும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் மோசமடைவதை அரசாங்கம் விரும்பவில்லை. இடைக்கால அரசு  இந்தியா போன்ற ஒரு பெரிய அண்டை நாட்டுடன் கசப்பான உறவை விரும்பவில்லை, உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது என்று வங்கதேச நிதி ஆலோசகர் சலேஹுதீன் அகமது தெரிவித்துள்ளார். மேலும்  தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்தியாவுடனான உறவுகளை இயல்பாக்க தனிப்பட்ட முறையில் முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.