நைஜீரியாவில் மினி பேருந்தும் காரும் மோதிய விபத்தில் பேருந்தில் இருந்த 20 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் மினி பேருந்து ஒன்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரும் மினி பேருந்தும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதியதில் மினி பேருந்து திடீரென தீப்பிடித்து மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.
இச்சம்பவம் அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் இருந்தவர்கள் தப்பமுடியாமல் குழந்தைகள் உட்பட 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் சிலர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.